சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஊழல் கட்சி என விமர்சனம் செய்திருந்தார். அதற்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பதிலளித்தார். ”திமுக மீது எம்.ஜி.ஆர். கூறிய நிரூபிக்க முடியாத குற்றச்சாட்டுக்களை எடப்பாடி பழனிசாமி இன்னும் திமுக மீது வைக்கிறார். மூன்றாம் தர மனிதரைப் போல பொறுப்பின்றி நடக்கிறார் முதல்வர். சசிகலாவின் காலைத் தொட்டுத் தவழ்ந்து முதல்வரான எடப்பாடி பழனிசாமி, பல்வேறு அவதூறுகளைச் சுமத்தியிருக்கிறார். 2ஜி உட்பட திமுக மீதான குற்றச்சாட்டு குறித்து கோட்டையில் வைத்து நேருக்கு நேர் என்னுடன் விவாதிக்க முதல்வர் தயாரா?
உச்சநீதிமன்றத்தால் மன்னிக்க முடியாத கொள்ளைக்காரி எனக் குறிப்பிடப்பட்டவர்தான் ஜெயலலிதா. நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. திமுக மீது எடப்பாடி பழனிசாமி ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது மல்லாக்கப் படுத்துக்கொண்டு எச்சிலை அல்ல, மலத்தை கொட்டிக்கொள்வதற்கு சமம்.
நான் முதல்வருக்கு பகிரங்கமாக சவால் விடுகிறேன். அதிமுக ஊழல் கட்சியா அல்லது திமுக ஊழல் கட்சியா என்பதை என்னுடன் விவாதிக்க நீங்கள் தயாரா? மொத்த அமைச்சரவையையும் கூட்டிக்கொள்ளுங்கள். அட்டர்னி ஜெனரலையும் வைத்துக் கொள்ளுங்கள். கோட்டையில் நேருக்கு நேர் என்னுடன் விவாதிக்கத் தயாரா?

 

எடப்பாடி பழனிச்சாமி காலில் விழுந்து பதவிபெற்ற ஜெயலலிதாவும், சசிகலாவும் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகள். நீங்கள் ஆதாரமின்றி திமுகவை குறை சொல்வது ஏற்புடையது அல்ல. திமுக பற்றி அவதூறாகப் பேசியதற்காக எடப்பாடி பழனிச்சாமி மன்னிப்பு கேட்க வேண்டும். மனதில் திடம் இருந்தால் நேருக்கு நேர் விவாதிக்க கோட்டைக்கு அழையுங்கள்” என்று ஆ.ராசா தெரிவித்துள்ளார்.