Iruttu Araiyil Murattu Kuththu should be banned
இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படம் ஆபாசத்தை திணிக்கும் வகையில் இருப்பதால், இதை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

தமிழ்நாட்டு திரையரங்குகளில் கடந்த வாரம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ என்ற தலைப்பிலான திரைப்படம் ஏற்படுத்தி வரும் பண்பாட்டு சீரழிவுகள் குறித்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கின்றன.
மக்களை மிக எளிதில் சென்றடைவதற்கான ஊடகமாக கருதப்படும் திரைப்படங்கள் சமூக சிக்கல்கள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு மாறாக, அவர்களை மயக்குவதற்காக மலிவான ஆபாசங்களை திணிப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.
திரைப்படங்கள் மிகவும் சிறப்பான கலை வடிவம் ஆகும். அதை சமுதாயத்தைக் கெடுக்கும் களையாக மாற்றிவிடக்கூடாது. இதுபோன்ற திரைப்படங்களை திரைப்பட தணிக்கைச் சான்று வாரியம் எவ்வாறு அனுமதிக்கிறது? பெண்மையை இழிவுபடுத்தும் இத்தகைய படங்களுக்கு எதிராக போராட்டம் நடத்த மகளிர் அமைப்புகள் முன்வராதது ஏன்? ஆகியவை தான் விடை தெரியாத வினாக்களாக உறுத்துகின்றன.

மது, புகை மற்றும் பிற போதைப் பொருட்கள் ஏற்படுத்தும் சமூகச் சீரழிவுகளை விட மோசமான சீர்கேட்டை இதுபோன்ற ஒற்றைத் திரைப்படம் ஏற்படுத்திவிடும்.
இத்தகைய மலிவான, அருவருக்கத்தக்க ஆபாசப் படங்களை பார்ப்பதிலிருந்து இளைஞர்களும், மாணவர்களும், தமிழ் சமுதாயத்தின் பிற அங்கங்களும் விலகி இருக்க வேண்டும். கருத்து சுதந்திரம் என்ற போர்வைக்குள் புதைந்து கொள்ளாமல் தமிழகத்தில் பண்பாட்டு சீரழிவை ஏற்படுத்தும் இந்தத் திரைப்படத்தை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும் இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
