ஐபிஎல் போட்டிகள் வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட்டது தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி என்று இயக்குநர் பாரதிராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. டெல்லியில் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அதிகாரிகள் ஆலோசனைக்கு பின் முடிவு
செய்யப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. சென்னையில் ஐபிஎல் போட்டியை நடக்க விடமாட்டோம் என தமிழ் அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன. 

இந்த நிலையில் நேற்று ஐபிஎல் போட்டி நடைபெற்றது. போட்டி நடைபெறுவதற்கு முன்னதாக சென்னை அண்ணா சாலை மற்றும் சேப்பாக்கம் மைதானத்தை
சுற்றியுள்ள பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த போராட்டத்தில் இயக்குநர் பாரதிராஜா, வைரமுத்து, சீமான், வெற்றிமாறன், தங்கர்பச்சான், ராம் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, போலீசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது
செய்யப்பட்டனர். இந்த நிலையில், போலீஸ் பாதுகாப்புடன் ஐபிஎல் போட்டி நடைபெற்றது. மைதானத்துக்குச் சென்ற பார்வையாளர்கள் போட்டி நடைபெறும்போது, மைதானத்துக்குள் செருப்பு வீசியும் கோஷங்கள் எழுப்பியும் ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.

ஏழு ஐபிஎல் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் மீதமுள்ள போட்டிகள் கேரளாவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. இந்த இடமாற்றம் தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஐபிஎல் போட்டிகள் மாற்றப்பட்டதை அடுத்து, டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டிகள் இடமாற்றம் செய்யப்பட்டது குறித்து இயக்குநர் பாரதிராஜா கூறும்போது, ஐபிஎல் போட்டிகள் வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட்டது தமிழருக்கு கிடைத்த வெற்றி என்று கருத்து தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், நாளை தமிழகம் வரும் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் மிகமிக உறுதியாக உள்ளோம் என்று கூறியுள்ளார்.

இது குறித்து திருமுருகன் காந்தி கூறுகையில், ஐபிஎல் போட்டிகளை, சென்னையில் இருந்து வேறு இடத்துக்கு முன்பே மாற்றியிருக்க வேண்டும் என்றும், தற்போது போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து போட்டிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றார்.