தேர்தல் நெருங்க நெருங்க, பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தின் செயல்பாடுகளால் திமுக தலைமை திகைத்து நிற்கிறது.  வடக்கு வாத்தியாரை வம்பாக இழுத்து வந்து வம்பை ‘பெரும்’விலை கொடுத்து வாங்கி விட்டோமோ என தாடையில் கை வைத்து தவித்துக் கிடப்பதாக தகவல்.
 
வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான திமுகவின் வியூக வகுப்பாளராக ஐபேக் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசனின் ஏற்பாட்டில் சுமார் 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இதற்காக ஒப்பந்தம் போடப்பட்டது. கொரோனாவை காரணம் காட்டி பணிகளைத் தள்ளிப்போட்ட ஐபேக், கொஞ்சம் கால தாமதமாகவே களமிறங்கியது. அதிலும் தேர்தல் கணிப்புப் பணிகளில் கொஞ்சமும் அனுபவம் இல்லாதவர்களை களமிறக்கிய ஐபேக், ஆங்காங்கே சர்வேக்களையும் எடுத்தது.
 
இந்நிலைய்ல் ஐபேக் நியமித்த ஆட்கள் ஆங்காங்கு உள்ள திமுக பிரமுகர்களை தொடர்புகொண்டு சாமரம் வீச, தகவல் தலைமைக்கு தந்தியடித்து விட்டது. இதனால் அதிர்ந்து போன தலைமை விளக்கம் கேட்க, முரசொலி மூலப்பத்திரம் எங்கே எனக் கேட்பதற்கு பதில் இல்லாமல் தவிப்பது போல எதை எதையோ சொல்லி ஐபேக் நிறுவனம் சமாளிப்பதாக கூறுகிறார்கள்.
 
அடுத்ததாக கூட்டணியிலுள்ள சிறிய கட்சிகள் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுமாறு திமுக வலியுறுத்தி வருவதாக செய்திகள் கசியவிடப்பட்டன. இதன் பின்னணியில் ஐபேக் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. பின்னர் ஸ்டாலின் தலையிட்டு நிலைமையை ஒருவழியாக சமாளித்து வருவதாகவும் தகவல். 
 
அண்மை காலமாக திமுக கூட்டணி இடப்பங்கீடு தொடர்பாக சமூக ஊடகங்களில் ஒரு தகவல் பரப்பப்பட்டு வருகிறது. காங்கிரசுக்கு 27 இடங்கள், மதிமுகவிற்கு 6, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் என சொல்கிறது அந்தத் தகவல். இந்தத் தகவல் திமுக மூத்த நிர்வாகிகளுக்கே புதிதாக இருக்க, அவர்கள் ஸ்டாலினிடம் விஷயத்தை கொண்டுபோய் இருக்கிறார்கள்.
 
தகவலறிந்து கடுப்பான தலைவர் மு.க. ஸ்டாலின், ‘’இன்னும் எதுவும் இறுதி முடிவாகவில்லை. அதற்குள் இப்படி கிளப்பிவிட்டால் என்ன அர்த்தம்? கூட்டணியை இவர்களே காவு வாங்கிவிடுவார்களோ ’’கலங்கிக் கிடப்பதாகவும் கூறுகிறார்கள். உடனடியாக இது குறித்து ஐபேக் நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டு இருக்கிறது. ’’கூட்டணி கட்சிகள் என்ன மன நிலையில் இருக்கின்றன என்பதை மோப்பம் பிடிப்பதற்காக அப்படி செய்வது எங்களது வாடிக்கை. அந்த அடிப்படையிலேயே இப்படி வதந்திகளை வத்தி வைத்தோம்’என சமாளித்துள்ளனர். 

இதனிடையே, தொகுதிப்பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகள் அறிவாலயத்திடம் தொடர்ந்து விளக்கம் கேட்க, இவர்களை எப்படி சமாளிப்பது என்கிற சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறது திமுக தலைமை’’என்கிறார்கள். ஐபேக்கின் செயல்பாடுகளை அறிந்த மு.க.ஸ்டாலின் வேலியில் போகிற ஓணானை எடுத்து வேட்டிக்குள் போட்டுக் கொண்டோமே எனத் தவித்து வருவதாக தகவல்.