ஐ.என்.எஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் 
பலகோடி மதிப்புள்ள அசையும், அசையா சொத்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளன. 

மும்பையைச் சேர்ந்த இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோர் ஐ.என்.எக்ஸ். மீடியா என்ற தொலைக்காட்சி நிறுவனத்தை நடத்தி வந்தனர். இந்த நிறுவனம், விதிமுறைகளை மீறி ரூ.305 கோடிக்கு தனது பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்றுள்ளது. இதற்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் வாங்குவதற்காக கார்த்தி சிதம்பரம் உதவி செய்ததாகவும், கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனங்களுக்கு மொரீஷியஸ் நாட்டில் இருந்து பணம் வந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 

இதையடுத்து கடந்த ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். கார்த்தி சிதம்பரத்தின் மீது 5 பிரிவுகளில் வழக்கும் பதிவு செய்தனர். சிபிஐ அளித்த தகவல்கள் அடிப்படையில் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த மே மாதம் கார்த்தி சிதம்பரம், ஐ.என்.எக்ஸ் மீடியா இயக்குனர்களான பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜி ஆகியோர் மீது அமலாக்கப் பிரிவு வழக்குப் பதிவு செய்தது. 

இந்த விவகாரத்தில் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திற்கு சட்டத்திற்கு புறம்பான வெளிநாட்டு முதலீடுகள் கிடைக்க கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும், அதற்காக கார்த்தி சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாகவும் சிபிஐ கூறியது. அதன் அடிப்படையில் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை தொடர்ந்தது. 

இது தொடர்பான வழக்கு விசாரணை டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய ரூ.54 கோடி மதிப்புள்ள சொத்துக்களை, அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. டெல்லி, பாட்டியாலாவில் உள்ள ப.சிதம்பரத்தின் வீடு, உதகமண்டலம், கொடைக்கானல் ஆகிய இடங்களில் உள்ள வீடுகள், லண்டன் மற்றும் வெளிநாடுகளில் உள்ள காத்திக் சிதம்பரத்தின் சொத்துக்கள், வங்கியில் இருந்த நிரந்தர இருப்பு ரூ.90 லட்சம் ஆகியவற்றை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.