ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தியின் தந்தை என்ற ஒரே காரணத்திற்காக ப.சிதம்பரத்தை சிறையில் வைத்துள்ளனர் என வழக்கறிஞர் கபில் சிபில் கூறியுள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்ட அனுமதி வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சி.பி.ஐ அதிகாரிகளால் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த நிலையிலேயே இதே வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கடந்த மாதம் 16-ம் தேதி ப.சிதம்பரத்தை கைது செய்தனர்.

இந்நிலையில், சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்தது. ஆனால், அமலாக்கத்துறை வழக்கு நிலுவையில் இருந்ததால் அவரால் சிறையில் இருந்து வெளியே வர முடியவில்லை. இதையடுத்து அமலாக்கத்துறை வழக்கிலும் அவர் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் விண்ணப்பித்தார். ஆனால், அதில் ஜாமீன் கிடைக்காததால், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில் கார்த்தியின் தந்தை என்ற ஒரே காரணத்திற்காக சிதம்பரத்தை சிறையில் வைத்துள்ளனர். மின்னஞ்சல், குறுஞ்செய்தி என எதிலும் ப.சிதம்பரத்தின் பெயர் இடம் பெறவில்லை என கூறினார். இதனையடுத்து, இந்த வழக்கை உச்சநீதிமன்றம் நாளை ஒத்திவைத்தது. இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டதால் சிதம்பரத்தின் சிறைவாசம் நாளை 100-வது எட்ட உள்ளது.