ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 14 பேர் மீது டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிதம்பரம், ஜாமீன் கேட்டு அடுத்தடுத்து பலமுறை மனுத்தாக்கல் செய்து வந்தார். ஆனால், அவரது ஜாமீன் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை முயற்சித்து வந்தது. இந்நிலையில், அக்டோபர் 16-ம் தேதியன்று அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளது. 

இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த குற்றப்பத்திரிக்கையில் 14 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம், இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.