தங்க.தமிழ்செல்வன் இனி விஸ்வரூபம் எடுக்க முடியாது. என்னைப் பார்த்தால் பெட்டிப்பாம்பாய் அடங்கி விடுவார் என டி.டி.வி.தினகரன்
தெரிவித்துள்ளார்.

 

தங்க தமிழ்செல்வன் போர்க்கொடி தூக்கி வரும் நிலையில் செய்தியாளர்களை சந்தித்த டி.டி.டி.தினகரன், ‘’இது அவசர ஆலோசனை எல்லாம் ஒன்றும் கியைடாது. இது திட்டமிட்ட ஆலோசனை கூட்டம் தான். தேனி மாவட்ட நிர்வாகிகள் வந்திருக்கிறார்கள். அவர்களுடன் ஆலோசித்தேன்.

கடந்த வாரத்தில் ஒரு ரேடியோவிற்கு தங்க தமிழ்செல்வன் பேட்டி அளித்துள்ளார். அதில் தேவையில்லாத விஷயங்களைப் பெற்றி பேசி இருக்கிறார். நான் அப்போது பெங்களூரு சென்றிருந்தேன். அவரது பேட்டி குறித்து கட்சியினர் எனக்கு புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த 20 ம் தேதி தங்கத்தை நேரடியாக வரச் சொன்னேன். அப்போது அவரிடம், ஏன் இப்படி வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசுகிறீர்கள் எனக் கேட்டேன். நான் அப்படி பேசவில்லை. கேள்விகளை தப்பு தப்பாக பேசிவிட்டனர். அதனால் பேசவேண்டியதாகி விட்டது எனக் கூறினார். ’தேவையில்லாமல் பேசி ஏன் மாட்டிக்கொள்கிறீர்கள் என அறிவுறுத்தினேன். 

இப்படிப்பேசிக் கொண்டு இருந்தால் கொள்கை பரப்பு செயலாளர், மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கி விடுவேன் எனக் கூறினேன். புதிதாக தலைமை கழகத்தில் இருந்து கட்சி பொறுப்புகளை அறிவிக்க இருக்கிறோம். யாரையும் நீக்க வேண்டிய அச்சமோ பயமோ எதுவுமே கிடையாது. ஜூலை முதல் வாரத்தில் சின்னம்மாவிடம் பேசிவிட்டு அறிவிப்போம். தங்க தமிழ்செல்வனிடம் வேறு எண்ணம் இருந்தால் கூட செயல்படுத்துங்கள் எனக் கூறினேன். கடந்த வாரம் ராஜ்யசபா சீட் கேட்பதாக ஒரு வார இதழில் வெளியிடப்பட்டிருந்தது.  

வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி வருகிறார் தங்க தமிழ்செல்வன். நானும் ரொம்ப நாளாக எச்சரித்து வருகிறேன். இனி விளக்கம் அவர் நடந்து கொண்டது பற்றி கேட்க விளக்கம் கேட்க முடியாது. விரைவில் கொள்கைப்பரப்பு செயலாளர் அறிவிக்கப்படுவார். இதுவரை அவரை நீக்கம் செய்யவில்லை.

ஆனால், அவரது பொறுப்புக்கு மற்றொருவர் அறிவிக்கப்படுவார். தங்க தமிழ்செல்வனை யாரோ பின்னாலிருந்து இயக்குகிறார்கள்.
என்னிடம் நேராக பேசமாட்டார். வெளியில் தான் இப்படி பேசுவார். எனக்கு அறிவுரை கூற அவர் யார்? ஊடகங்கள் அவரை பெரிதாக்கி
ஒரே நாளில் அவரது கதையை முடித்து விட்டன. அவர் இனி விஸ்வரூபம் எடுக்க முடியாது. என்னைப்பார்த்தால் பெட்டிப்பாம்பாக  அடங்கி விடுவார்’’ எனத் தெரிவித்துள்ளார்.