மகாபாரத காலத்திலேயே  இணையதளம் மற்றும் செயற்கை கோள்கள் இருந்துள்ளன என திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் தேப் தெரிவித்துள்ளார்.

கடந்த 25 ஆண்டுகளாக திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்தது. இந்தியாவின் ஏழை மற்றும் எளிமையான முதலமைச்சர் என அனைவராலும் அறியப்பட்ட மாணிக் சர்க்கார் தொடர்ந்து 5 முறை முதலமைச்சராக இருந்தார்.

ஆனால் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மாணிக் சர்க்கார் ஆட்சி அகற்றப்பட்டு பாஜக ஆட்சிக்கு வந்தது. முதலமைச்சராக  பிப்லாப் தேப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் அகர்தலாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பிப்லாப் தேப்  , இணையதள பயன்பாடு என்பது மகாபாரத காலத்திலிருந்தே உள்ளது. கண்பார்வையற்ற திரிதராஷ்டிரர், குருசேத்ர யுத்தம் நடந்துகொண்டிருந்தபோது, போர்க்களத்தின் அருகே இல்லாதபோதே, அங்கு நடைபெறும் தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொண்டார். இது அப்போது இருந்த தொழில்நுட்பம் மற்றும் செயற்கைக்கோள் தொடர்பின் மூலமே சாத்தியமானது என குறிப்பிட்டார்.

ஐரோப்பிய யூனியன்கள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணையளதம் தங்கள் கண்டுபிடிப்பு என கூறலாம். ஆனால், உண்மையில், இவை அனைத்தும் இந்தியாவின் தொழில்நுட்பம் தான். பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் இணையதளம் மற்றும் செயற்கைகோள்கள் இருந்துள்ளன என தெரிவித்தார்.

இன்றும் கூட இணையதளம் மற்றும் மென்பொருள் தொழில்நுட்பத்தில் நாம் முன்னோடியாக இருக்கிறோம். மைக்ரோசாப்ட் நிறுவனத்தை எடுத்துக்கொள்ளுங்கள், அமெரிக்க நிறுவனமாக இருந்தாலும் கூட, அந்த நிறுவனத்தில் பெரும்பாலான என்ஜினியர்கள் நமது நாட்டைச்சேர்ந்தவர்களே என்றார்.