நிவர் புயலையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.

தெற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இன்று காலை நிலவரப்படி காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 630  கிமீ தொலைவில் மையம் கொண்டிருந்தது. இதன் நகர்வை வானிலை ஆய்வு மையம் தீவிரமாக கண்காணித்து வருகிறது. நிவர் புயலை எதிர்கொள்வது தொடர்பாக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இந்நிலையில் சென்னையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிவர் புயல் தொடர்பாக செய்தியாளர்களுக்கு  பேட்டியளிக்கையில்;- நிவர் புயலையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியாளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அனைத்து ஏரிகள், நீர் நிலைகளை கள ஆய்வு மேற்கொண்டு கரை உடைப்புகள் இல்லாமல் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை   மீட்டு அரசு முகாம்களில் தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 36 வருவாய் மாவட்டங்களில் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.