சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தப்பி செல்ல அரசியல் பிரமுகர் ஒருவர் உதவி செய்தது குறித்து எம்.பி. கனிமொழி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் போரீசார் கடுமையாக தாக்கியதில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இந்த வழக்கை ஒரு நொடி கூட வீணடிக்கக்கூடாது என்று கூறி சிபிசிஐடி விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், முத்து ராஜ், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோரும் கைது செய்யப்பட்டு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 3 பேருக்கு ஜூலை 16ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், சிபிசிஐடி காவல்துறையினர் தீவிரமாக தேடியபோது சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதரை அதிமுக  பிரமுகர் ஒருவர் காப்பாற்ற முயற்சி என தகவல் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து தூத்துக்குடி எம்.பி. கனிமொழி பத்திரிகை செய்தியை மேற்கோள் காட்டி தனது டுவிட்டர் பக்கத்தில், அதிமுக குற்றவாளிகளை காப்பாற்றுகிறது என்று நாங்கள் சொன்னால் அரசியல் செய்கிறோம் என்கிறார்கள். இதற்கு எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர் கடம்பூர் ராஜுவும் என்ன பதில் சொல்லப்போகிறார்கள் என்று பதிவிட்டுள்ளார்.