அதிமுக ஆட்சி மீண்டும் அமையும்போது கருணாநிதி மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்திய மதுரை வடக்கு எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா, மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “2001ம் ஆண்டிற்கு பிறகு 4 சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடந்துவிட்டன. இதில் ஒன்றில்கூட திமுக 100 இடங்களில் வெல்ல முடியவில்லை. 2021ம் ஆண்டிலும் திமுக நிச்சயம் வெற்றி பெற முடியாது. திமுகவைவிட பன்மடங்கு வியூகத்துடன் அதிமுக தேர்தலை சந்திக்கும்.


தமிழகத்தில் அதிமுக கொண்டு வந்த திட்டங்களை நாங்கள் உரிமை கொண்டாடி வருகிறோம். நாங்கள் கொண்டு வந்த திட்டங்களை உரிமை கொண்டாட அதிமுகவுக்கு முழு உரிமை உள்ளது. கருணாநிதியின் உடல்நிலையை கருத்தில் கொள்ளாமல் வலுக்கட்டயமாக மு.க. ஸ்டாலின் கருணாநிதியை தேர்தலில் நிற்க வைத்தார் என அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து முக.ஸ்டாலின் பேசி வருவது சரியாக இருக்காது. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் அழகிரி கூறியதன் அடிப்படையில் கருணாநிதி மரணம் குறித்து  விசாரணை நடத்தப்படும்” என ராஜன் செல்லப்பா தெரிவித்தார்.