"1976-ஆம் ஆண்டு தொழில்நுட்ப கல்வி, மருத்துவ கல்வி, பல்கலைக்கழகங்களில் சட்டத் திருத்தங்களைச் செய்ய மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரம் பறிக்கப்பட்டன. அவை மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டது."
நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்குக் கோரும் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், மாநிலங்களவை திமுக எம்பி வில்சன் கல்வி தொடர்பாக தனி நபர் மசோதா ஒன்றை அதிரடியாகத் தாக்கல் செய்தார்.
நாடு முழுவதும் நீட் தேர்வு மூலம் மருத்துவக் கல்விப் படிப்புகள் நிரப்பப்படும் நிலையில், இத்தேர்வு முறையால் பாதிக்கப்படும் ஏழை, எளிய, கிராமத்து மாணவ மாணவிகள் தற்கொலை செய்துகொள்வது தமிழகத்தில் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இதனால், தமிழகத்தில் பாஜக உள்ளிட்ட சில கட்சிகள் நீங்கலாக அனைத்து அரசியல் கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரி வருகின்றன. ஏற்கெனவே கடந்த அதிமுக ஆட்சியில் 2017-இல் நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரும் மசோதா நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால். அந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்கவில்லை.

இந்நிலையில் அதைத் தொடர்ந்து திமுக ஆட்சி பதவியேற்றதும் நீட் பாதிப்பு குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஏகே ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரைப்படி திமுக அரசு மீண்டும் நீட் விலக்கு கோரி புதிய மசோதாவைச் சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பரில் நிறைவேற்றி தமிழக ஆளு நருக்கு அனுப்பி வைத்தது. 5 மாதங்களுக்குப் பிறகு அந்த மசோதாவை தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பினார். இதனால், தமிழக அரசியல் களம் சூடாகி இருக்கிறது. மீண்டும் ஆளுநருக்கு மசோதாவை அனுப்பி வைக்கும்படி பல தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் நீட் விலக்குக் கோரும் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது பற்றி விவாதிக்க தமிழக அரசு சட்டப்பேரவை அனைத்துக் கட்ச்க் கூட்டத்தை இன்று கூட்டியிருக்கிறது.

இதற்கிடையே கல்வி மாநில அரசு, மத்திய அரசு எனப் பொதுப் பட்டியலில் இருப்பதே இதுபோன்ற விவகாரங்களுக்கு காரணம் என்ற கருத்துகளும் பரிமாறப்பட்டு வருகின்றன. இதையொட்டி திமுக மாநிலங்களவை எம்.பி. வில்சன், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று மாநிலங்களவையில் தனி நபர் மசோதாவைத் தாக்கல் செய்தார். இதுதொடர்பாக மாநிலங்களவையில் வில்சன் பேசும்போது, “1976-ஆம் ஆண்டு தொழில்நுட்ப கல்வி, மருத்துவ கல்வி, பல்கலைக்கழகங்களில் சட்டத் திருத்தங்களைச் செய்ய மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரம் பறிக்கப்பட்டன. அவை மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டது. மாநிலங்கள் இழந்த அதிகாரத்தை மறுபடியும் மீட்கவும் கூட்டாட்சி தத்துவத்தை நிலைநிறுத்தவும் புதிய அரசியலமைப்பு சட்டத்திருத்த தனிநபர் மசோதா தாக்கல் செய்கிறேன்” என்று தெரிவித்தார்.

இதில் குறிப்பிடும்படியான விஷயம், 1976-ஆம் ஆண்டில் நாட்டில் எமர்ஜென்சியை அன்றைய இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு அமல்படுத்தியிருந்த வேளையில்தான், கல்வி மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அன்று மத்திய காங்கிரஸ் அரசு பறித்த அதிகாரத்தைத்தான் மீண்டும் மீட்கும் வகையில் திமுக எம்.பி. வில்சன் தனிநபர் மசோதாவை தாக்கல் செய்திருக்கிறார்.
