கோவாக்ஸின் தடுப்பூசி பாதுகாப்பானது எனவும், அது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது எனவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. உலகம் முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக கொரோனாவின் கோரத் தாண்டவத்தில் ஒட்டுமொத்த உலகமும் சின்னாபின்னம் ஆகி இருக்கிறது. பல நாடுகளில் இந்த வைரஸ் பரவியிருந்தாலும் இதுவரையில் அமெரிக்காவே இந்த வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. இதுவரையில் இந்தியாவில் 99 லட்சத்து 51 ஆயிரத்து 72 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட் டுள்ளனர். ஒரு லட்சத்து 44 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 94 லட்சத்து 89 ஆயிரத்து 143பேர் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். 

இப்படி வரலாறு காணாத அளவிற்கு இந்தியாவில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த வைரஸ் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், இந்தியாவின் கொரோனா  தடுப்பூசி ஆராய்ச்சியும் கை கூடி வந்துள்ளது. நம்நாட்டின் பாரத் பயோடெக் நிறுவனமும்-ஐசிஎம்ஆரும் இணைந்து உருவாக்கியுள்ள கோவாக்சின் தடுப்பூசியின் முதற்கட்ட சோதனை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த தடுப்பு மருந்தின் முதற்கட்ட சோதனை முடிவில் கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது எனவும், மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதும் தெரியவந்துள்ளதாக ஐசிஎம்ஆர் அறிவித்துள்ளது. இம்மருந்தின் மூன்று வகையான பார்முலாக்கள்களும், நோய் எதிர்ப்பு சக்தியின் பலனை அளித்துள்ளது எனவும் ஐசிஎம்ஆர் கூறியுள்ளது. 

மேலும், இந்த மருந்தில் பக்க விளைவுகள் ஏதுமில்லை என கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஐசிஎம்ஆர் குறிப்பிட்டுள்ளது. அதேபோல் இந்த தடுப்பூசியை 2 மற்றும் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைக்கலாம் எனவும் கூறியுள்ளது. தற்போது இந்த தடுப்பூசியை மனித உடலில் செலுத்தி பரிசோதிக்கும் மூன்றாம் கட்ட பரிசோதனையில் இருந்து வருகிறது எனவும், அந்த பரிசோதனையில் நாடு முழுவதும் சுமார் 26 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்று இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அமெரிக் காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் மருந்து நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள தடுப்பூசி அமெரிக்க மற்றும் இங்கிலாந்து நாடுகளில் மக்கள்பயன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில், விரைவில் இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசியில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.