பெண்கள் மட்டுமே இணைந்து செயல்படக்கூடிய, "தேசிய பெண்கள் கட்சி' என்கிற பெயரில் கட்சி ஒன்றை துவங்கியுள்ளார் மருத்துவர் ஸ்வேத ஷெட்டி என்பவர். இந்த கட்சி குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து  தான் துவங்கியுள்ள கட்சியை பற்றியும் அதன் தனித்துவத்தையும் எடுத்து கூறினார். 

அப்போது பேசிய அவர்... "இனியும் நியாயங்களுக்காகவும், பெண்களுக்கு எதிராக நடைபெறும் அநியாயங்களுக்காகவும் போராடிக் கொண்டிருக்க முடியாது. எங்களுக்கான களங்கள் மாற வேண்டும் என்றால் நாங்களே களத்தில் இறங்க வேண்டும். இதற்காக துவங்கப்பட்டுள்ளது "தேசிய பெண்கள் கட்சி" என கூறினார்.

இதை தொடர்ந்து பேசிய அவர், பெண்களுக்கான உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்படுகின்றன. தங்கள் உரிமைக்காக போராடும் நிலையிலேயே பெண்கள் உள்ளனர். 

குறிப்பாக வீடுகள், அலுவலகங்களில், பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள், அதிகரித்து வருகின்றன. குழந்தைகள் மீதும் இது போன்ற தாக்குதல் நடைபெறுவது உச்ச கட்ட வேதனையான சம்பவம். 

இப்படி பல சம்பவங்கள் அரங்கேறி வரும் போதும், பெண்களின் நலனுக்காக யாரும் போராடுவதில்லை. அரசியல் கட்சிகளில், பெண்கள் இருந்தாலும், அங்கு ஆணாதிக்கமே மேலோங்கி உள்ளது. இதனால், பெண்களின் நலனுக்காகவும், உரிமைகளைப் பெறுவதற்காகவும், தேசிய அளவில், தனியாக கட்சி துவக்கியுள்ளேன்.

இந்தக் கட்சியில், பெண்கள் மட்டுமே சேர்க்கப்படுவர். சட்டசபை, பெண்களுக்கு, 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற, தீவிர முயற்சி எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார் இந்த கட்சியின் நிறுவனர் ஸ்வேதா.