மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த 288 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, சிவசேனா 56 இடங்களிலும், பாஜக 105 இடங்களிலும் வென்றன. ஆனால் ஆட்சியில் சமபங்கு வேண்டும் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தி வருகிறார், அதற்கு பாஜக திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

இதனால் புதிய அரசு அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.இப்போது இருக்கும் சட்டப்பேரவைக் காலம் வரும் 8-ம் தேதியுடன் முடிகிறது. அதற்குள் புதிய ஆட்சி அமைக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

இந்த சூழலில் பாஜக மூத்த தலைவரும், நிதியமைச்சருமான சுதிர் முங்கந்திவார் தனியார் சேனல் ஒன்றுக்கு நேற்று அளித்த பேட்டியில் " விரைவில் புதிய ஆட்சி அமைப்பதற்கான பேச்சைத் தொடங்குவோம். 7-ம் தேதிக்குள் புதிய ஆட்சி அமையாவிட்டால் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்படும்" எனத் தெரிவித்தார்

இதுகுறித்து சிவசேனாவின் அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னாவில் இன்று வெளியாகியுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:

நிதியமைச்சர் முங்கந்திவார் பேசிய வார்த்தைகள் மகாராஷ்டிராவை அவமானப்படுத்தும் வகையில் இருக்கிறது. 7-ம் தேதிக்குள் ஆட்சி அமைக்காவிட்டால் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்படும் என்று கூறியுள்ளாரே, குடியரசுத்தலைவர் என்ன சட்டைப்பாக்கெட்டிலா இருக்கிறார்.

முங்கந்திவார் கருத்துக்கள் ஜனநாயக விரோதமானது, சட்டவிரோதமானது. அரசியலமைப்புச்சட்டம், சட்டத்தின் ஆட்சி குறித்து தெரியாமல் முங்கந்திவார் பேசியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மக்கள் அளித்த தீர்ப்பை அவமதிக்கும் வகையில் முங்கந்திவார் பேசியிருக்கிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து நிதியமைச்சர் முங்கந்திவாரிடம் நிருபர்கள் இன்று கேட்டபோது “நாங்கள் கேட்கிறோம், சரியான நேரத்துக்குள் ஆட்சி அமைக்காவிட்டால் என்ன நடக்கும். அரசியலமைப்புச்சட்டப்படி என்ன நடக்குமோ அது நிகழும். குடியரசுத்தலைவர் ஆட்சி வரும். மாணவர்கள் கேள்விக்கு ஆசிரியர் பதில் அளித்தால் அது எச்சரிக்கையாக எடுக்கப்படும். நாங்கள் எச்சரிக்கை விடுக்கவில்லை,பதில் அளித்தோம்” எனத் தெரிவித்தார்