சிஏஏ குறித்து ரஜினிக்கு நாம் சொல்லித் தர வேண்டிய தேவையில்லை என ஹஜ் கமிட்டித்தலைவர் தலைவர் பிரசிடென்ட் அபூபக்கர் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் டெல்லி கலவரம் குறித்து தனது பலத்த கண்டனத்தை தெரிவித்திருந்தார். டெல்லி கலவரம் உளவுத்துறை தோல்வி, உளவுத்துறை என்பது உள்துறை அமைச்சகம் தோல்விதான், கலவரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்குங்கள் இல்லாவிட்டால் ராஜினாமா செய்துவிட்டுச் செல்லுங்கள் என ரஜினி ஆவேசமாக பேசியிருந்தார்.

இதுதவிர சிஏஏ குறித்தும் என்பிஆர், என்ஆர்சி குறித்தும் தங்களுக்கு புரிதல் வேண்டும் என எழுதிய இஸ்லாமிய அமைப்பின் தலைவரை அழைத்து நாம் நேரில் பேசுவோம் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தை போயஸ் இல்லத்தில் ஹஜ் கமிட்டித்தலைவர் முகமது அபூபக்கர் சந்தித்து பேசினார்.

சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த இந்திய ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் கூறியதாவது: ரஜினிகாந்த் எனது நீண்டகால குடும்ப நண்பர் என்ற அடிப்படையில் அவரைச் சந்தித்தேன். டெல்லி கலவரத்திற்கு எதிராக குரல் கொடுத்ததற்கு அவருக்கு நன்றி தெரிவித்தேன். குடியுரிமை திருத்த சட்டம் குறித்து எங்களது கருத்துக்களை அப்போது பகிர்ந்து கொண்டோம்.

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து நாம் சொல்லி கொடுத்து ரஜினிக்கு தெரிய வேண்டியது எதுவும் இல்லை, அவர் அனைத்தையும் படிக்கிறார் ஏனென்றால் அவர் தமிழர்களுக்கு மட்டுமல்ல அவர் ஒட்டு மொத்த இந்தியாவிற்கு சூப்பர் ஸ்டார். நாம் எல்லோரும் ஒரே நாட்டு மக்கள், தொப்புள் கொடி உறவுகள். இந்திய நாட்டில் பொருளாதாரத்தில் நாடு சிறப்பாக வரவேண்டும் என்பது தான் நடிகர் ரஜினியின் எண்ணம் என்பது இந்த சந்திப்பின் போது தெரிய வந்தது. சிஏஏ குறித்து நாம் வெறுப்பு பேச்சை பேசி எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றக்கூடாது என தெரிவித்தார்.