சென்னை சர்வதேச மையம் சார்பில் ‘தேசத்தின் தற்போதைய நிலை- நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்’ என்ற தலைப்பில் கலந்தாய்வு விவாத நிகழ்ச்சி சென்னையிஙல நடைபெற்றது.இதில் இந்து குழுமத்தின் தலைவர் என்.ராம், முன்னாள் மத்திய அமைச்சர்  ப.சிதம்பரம் ஆகியோர் பங்கேற்று விவாதித்தனர்.

அப்போது பேசிய சிதம்பரம், நாட்டின் பொருளாதாரம் கடந்த காலங்களிலும் தேக்க நிலையை சந்தித்திருக்கிறது. ஆனால் அதில் இருந்து நாடு மீண்டு வந்துவிட்டது. ஆனால் இப்போது உள்ள தேக்கநிலை மிகவும் மோசமானது. 

மோடி தலைமையிலான ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் ஐ.சி.யூ.வில் (தீவிர சிகிச்சை பிரிவு) இருக்கிறது. இதனை நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசில் பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியமே கூறியிருக்கிறார். 

கடந்த 5 காலாண்டுகளாவே பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வந்திருக்கிறது. ஒட்டுமொத்த வளர்ச்சி வீதம் 8 சதவீதத்தில் இருந்து 4.5 சதவீதம் ஆக குறைந்திருக்கிறது.

இதில் உண்மை என்னவென்றால் ஒட்டுமொத்த வளர்ச்சி வீதம் 3 சதவீதம் தான் இருக்கும் என்று அரவிந்த் சுப்பிரமணியமே தெரிவித்திருக்கிறார். ஏனென்றால் மோடி அரசு வளர்ச்சி வீதத்தை மதிப்பிடும் முறையை மாற்றியிருக்கிறது. 

மோடி அரசு 2-வது முறையாக பதவி ஏற்ற 7 மாதத்தில் வளர்ச்சி, முதலீடு, வேலைவாய்ப்பு உருவாக்குதல், கிராம பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தவில்லை. மாறாக முத்தலாக் தடை மசோதா, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம், குடியுரிமை சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட அரசியல் மற்றும் மதரீதியிலான விஷயங்களில் கவனம் செலுத்துகிறது.

ஆர்.எஸ்.எஸ்.-ன் சித்தாந்தமான இந்துத்துவத்தை தீவிரப்படுத்துகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு என்று எதுவும் செய்யவில்லை. பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. போன்றவற்றால் பொருளாதாரம் மோசமடைந்திருக்கிறது. பிரதமரின் அலுவலகமே அதிகாரம் மிகுந்ததாக இருக்கிறது. பிரதமர் அலுவலகத்தில் இருந்து வரும் குறிப்புகளின் படி தான் அமைச்சர்கள் , அதிகாரிகள் செயல்படவேண்டியது இருக்கிறது. 

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சுதந்திரம் இல்லை. மன்மோகன் சிங் சிறந்த பொருளாதார நிபுணர். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அவரும், பொருளாதார நிபுணர்களோடு ஆலோசனை கேட்டே செயல்பட்டு வந்தார். மோடி அரசில் பொருளாதார நிபுணர்களிடம் ஆலோசனைகள் கேட்பது இல்லை.

மன்மோகன் சிங் அருகாமையில் தான் இருக்கிறார். ஆனால் அவரிடம் ஒரு பேச்சுக்கு கூட இதுவரை ஆலோசனை கேட்கவில்லை என சிதம்பரம் அதிரடியாக குற்றம்சாட்டினார்.