ஜி.எஸ்.டி. இழப்பீடு கூடுதல் வரி வருவாயை மத்திய அரசு வேறு வகைகளுக்கான செலவுகளுக்கு தவறாகப் பயன்படுத்தியாக மத்திய செலவுகள் கட்டுப்பாட்டுத் தணிக்கையாளரின் (CAG) கண்டுபிடிப்பு மிகுந்த கவலையை அளிப்பதாக உள்ளது என எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது இதுகுறித்த தனது அறிக்கையில் அக்கட்சி தெரிவித்துள்ளதாவது:- 

நேர்மையற்ற மற்றும் பொய்யுரைக்கும் தன்மைகள் மோடி அரசின் தனிச்சிறப்புகளாக விளங்குவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.'ஜி.ஸ்.டி. இழப்பீடு கூடுதல்வரி சட்டம் 2017' என்பது, இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கட்டத்தில் ஜி.எஸ்.டி. நடைமுறைப்படுத்தப்பட்ட பின், அதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் வரிவருவாய்  இழப்புக்களை ஈடுசெய்வதற்கான ஏற்பாடாகும்.  இந்த 'ஜி.எஸ்.டி. இழப்பீடு கூடுதல் வரி' வருவாய் கணக்கிலிருந்து 47,272 கோடி ரூபாய்கள் அளவுக்கு மத்திய அரசு களவாடி வேறு வகைகளின் செலவுகளுக்கு மடைமாற்றி அப்பட்டமாக இச்சட்டத்தை மீறியுள்ளது கண்டனத்திற்கு உரியதாகும். மத்திய செலவுகள் கட்டுப்பாட்டுத் தணிக்கையாளரின் இப்போதைய கண்டுபிடிப்பானது மத்திய பாஜக அரசின் நேர்மையற்ற மற்றும் நம்பகத்தன்மையற்ற செயல்பாடுகளையும், நாட்டின் சட்டங்களை அவர்கள் மதிக்காத ஆணவப் போக்கையும் மீண்டுமொரு முறை வெளிப்படுத்தியுள்ளது. 

மாநில அரசுகளுக்குரிய சட்டப்படியான நிதிப்பங்கு மறுக்கப்பட்டுவருவது கண்டனத்திற்கு உரியதாகும். மாநிலங்களுக்குச் சேரவேண்டிய நிதியின் பெரும்பகுதியை  மத்திய அரசு சட்டப்புறம்பான வழியில் வேறு செலவுகளுக்கு தவறாகப் பயன்படுத்தி மறைத்துவிட்டு, மாநிலங்கள் தம் நிதிப் பற்றாக்குறையை ரிசர்வ் வங்கியிடம் கடன்வாங்கி சமாளிக்கவேண்டும் என்று மத்திய அரசு சொல்வது நகைப்புக்குரியதாகும். கடந்த வாரம் மத்திய நிதித்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில், "இந்திய ஒருங்கிணைந்த நிதியம் (CFI) மாநிலங்களின் வரிவருவாய் இழப்பீட்டிற்கு நிதியுதவி வழங்காது" என்று கூறினார்.  நிதியமைச்சரின் கூற்று ஜி.எஸ்.டி. இழப்பீடு வரி வருவாய் இந்திய தொகுக்கப்பட் நிதியத்திற்கு மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்ற சிஏஜி-யின் கண்டுபிடிப்பிற்கு முரணாக உள்ளது. 

சிஏஜி-யின் கண்டுபிடிப்பின்படி, ஜி.எஸ்.டி. இழப்பீடு கூடுதல் வரிவருவாய் வேறு செலவினங்களுக்கு மடைமாற்றம் செய்யப்பட்டதால், வருவாய் பற்றுவழி மிகைப்படுத்துவதாகவும், பட்ஜட் பற்றாக்குறையை குறைத்து மதிப்பிடவும் வழிவகுக்கும். இதை வேறு வார்த்தைகளில் சொல்வதானால், மத்திய அரசு நாட்டின் பொருளாதாரத்தின் உண்மை நிலையை இத்தகைய தவறான தகவல்கள் வாயிலாக நாட்டையும், நாட்டு மக்களையும் ஏமாற்றியுள்ளது கண்கூடாகும். மோடி அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்த நாள்முதல் ஜனநாயகம் உள்ளிட்ட நாகரீகமிக்க இந்திய நாட்டின் அனைத்து சிறப்புக்களும் பெரும் சீரழிவிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.  தகுதியில்லாத அரசியல்வாதிகளால் ஆளப்பட்டுவரும் இந்தியா இதற்குமுன் பொருளாதார வளர்ச்சியில் முன்னிலை வகுத்த நிலையில், இன்றோ பூஜ்ய பொருளாதார  வளர்ச்சிக்கும் கீழே படுபாதாளத்தில்  தள்ளப்பட்டுள்ளது.

ஜனநாயத்தின் அடிப்படைக் கொள்கைகளை குழித்தோண்டி புதைக்கும் வகையில், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தலையீடு மற்றும் ஆலோசனைகளை புறந்தள்ளி, நாடாளுமன்றத்தில் விவசாயிகளுக்கு எதிரான, கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான சட்டங்கள் நிறைவேற்றப்படும் அவலம் நிலவுகிறது.  மத்திய பாஜக அரசு மக்களுக்கானது அல்ல, அது தேர்ந்தெடுக்கப்பட்ட சில கார்ப்பரேட் முதலாளிகளுக்கானது என்பதையே இது காட்டுகிறது. ஆளும் கட்சியையும் அதன் ஆதரவுக் கட்சிகளையும் வளர்ப்பதற்கும், நாட்டின் செல்வம் கொள்ளையடிக்கப்படுகிறது என்பதே உண்மை நிலையாகும்.  சிஏஜி-யின் கண்டுபிடிப்பான, ஒரு குறிப்பிட்ட நிதியை வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டதும், தவறாகப் பயன்படுத்தியதும் என்பது கடுமையான குற்றச்சாட்டாகும்.

ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் அரசுகளை கவிழ்க்கும் பொருட்டு, எம்.எல்.ஏக்களை பெருந்தொகைக் கொடுத்து விலைக்கு வாங்க பாஜக ஈடுபட்டுவருகிறது.  ஜி.எஸ்.டி. நிதியைத் தவறாகக் கையாண்டது ஏம்.எல்.ஏக்களின் குதிரைப் பேரத்திற்கு பயன்படுத்துவதற்காகவா என்ற விசாரணையை முடுக்கிவிட வேண்டும். நாட்டை உளமார நேசிக்கும் மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்குவதன் வாயிலாக, ஜனநாயக ரீதியாக மத்தியில் ஆளும் தேசவிரோத சக்திகளை மாற்றுவதால் மட்டுமே, பாசிச சக்திகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற இயலும் என்று எஸ்டிபிஐ தெரிவித்துள்ளது.