கொரோனா தொற்றின் உற்பத்தி மையமாக இந்தியா மாறும்நிலை உருவாகியுள்ளது என ஹார்வர்ட் குளோபல் இன்ஸ்டியூட்டின் இயக்குனரும் சுகாதார வல்லுனருமான ஆஷிஷ் கே ஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர், சர்வதேச அளவில் இந்தியா கொரோனா ஹாட்ஸ்பாட்டாகி வருவது மிகவும் கவலை அளிக்கிறது, தடுப்பூசி கண்டுபிடிக்க குறைந்தது ஒரு வருடமாவது ஆகும் என்ற நிலை உள்ளதால், கொரோனா பரவுதலை தடுக்க இந்தியா என்ன செய்ய உள்ளது என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது. தற்போதைய நிலையில் இந்தியாவுக்கு மூன்று வழிகள் மட்டுமே உள்ளன. முதலாவது தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் ஆகும், அதற்கு தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இரண்டாவது பரிசோதனையை தீவிரப்படுத்துதல், தொற்றுகளை கண்டறிதல், மற்றும் அறிகுறி இருப்பவர்களை தனிமைப்படுத்துதல், மூன்றாவது முகக் கவசம் அணிதல் ஆகும். 

முகக்கவசம் அணிதல் என்பது மக்கள் அனைவரும் அவசியம் செய்ய வேண்டிய நடவடிக்கையாகும் என தெரிவித்துள்ளார். மேலும் தற்போது பரிசோதனை எண்ணிக்கையில் நாம் அதிகம் முன்னேறி உள்ளோம், ஆனால் எங்கு அதிகம் பரிசோதனை தேவைப்படுகிறது என்பதில் கவனம் செலுத்தப்படுவதில்லை. ஊரடங்கு நாம் ஏற்றுக்கொண்டு பின்பற்றுவதை விட எப்படி அதனை தவிர்ப்பது என்பதில் தான் அதிக கவனம் செலுத்துகிறோம். இந்த ஊரடங்கு நாம் முழுமையாக பயன்படுத்தவில்லை என கருதுகிறேன். இதனால்தான் பாதிப்பு அதிகரித்துள்ளது, பரிசோதனைகள் விஷயத்திலும் இப்படிதான் உள்ளது. சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது, ஆனால் அது நாடு முழுவதும் பரவலாக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் கூட நாம் இன்னும் பரிசோதனைகளை ஆரம்பிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை பரிசோதனைகளின் எண்ணிக்கையை குறைத்துக் காட்ட விரும்புவார்கள். பிரேசில் மற்றும் அமெரிக்க நாடுகளின் ஜனாதிபதிகளும் கூட அப்படித்தான் செய்து வருகின்றனர். 

பரிசோதனையை குறைப்பதால் நோயாளிகளின் எண்ணிக்கை குறையாது, கொரோனா பரவுவது குறைந்தால் மட்டுமே நோயாளிகளின் எண்ணிக்கை குறையும். இந்தியாவை போன்ற ஒரு துணைக்கண்டத்தில் பல நோயாளிகள் சோதனை செய்யப்படாமல்போக வாய்ப்புண்டு, அவர்களால் நோய் பரவல் மேலும் மேலும் அதிகரிக்கக்கூடும். இவ்வாறு அதிகரிக்கும் போது இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை அமெரிக்காவை விட அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. அந்த நிலையை நோக்கிதான் இந்தியா சென்றுகொண்டிருக்கிறது. இதே நிலை நீடித்தால் கொரோனா உற்பத்தி மையமாக இந்தியா மாறலாம், இவ்வாறு டாக்டர் ஆஷிஷ் கூறியுள்ளார். மேலும் இந்தியாவில் சமூகப் பரவல் தொடங்கிவிட்டது  என்பது அனைவருக்கும் தெரியவந்தாலும், அதை மறைக்கும் வேலை நடைபெற்று வருகிறது. ஆனால் அதையெல்லாம் விடுத்து இதிலிருந்து எப்படி மீள்வது என்பது குறித்து நாம் யோசிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.