இந்தியாவில் கொரோனா வைரஸ் இறப்பு விகிதம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில்,  ஜூன் 18 ஆம் தேதி நிலவரப்படி  3. 33 சதவீதத்தில் இருந்து 2.25 சதவீதமாக குறைந்துள்ளதாகவும், அதே நேரத்தில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைவோரின் விகிதம் ஜூன் மாதம் நடுப்பகுதி முதல், இன்று வரை 53 சதவிகிதத்திலிருந்து 64 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த  24 மணி நேரத்தில் சுமார் 35 ஆயிரத்து 576 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், இந்த வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 52 ஆயிரத்து 743 ஆக உயர்ந்துள்ளது.

உலகிலேயே மிகக் குறைந்த இறப்பு விகிதம் கொண்ட  நாடாக இந்தியா உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது, வீடு வீடாக கணக்கெடுப்புகள்,  தீவிரநோய் தடுப்பு நடவடிக்கைகள், நோய் தடம் கண்டறிதல் மற்றும்  அதை கட்டுப்படுத்துதல் போன்றவற்றின் விளைவாக இந்த சாதனை நடைபெற்றுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் மத்திய அரசின் வழிகாட்டுதலின் கீழ் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மிகத்திறமையாக நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் ஐசிஎம்ஆர் பாராட்டியுள்ளது. அதிக அளவில் சுகாதார மற்றும் களப்பணியாளர்களை பயன்படுத்தி நோய்த்தொற்றை தடுப்பதில் அரசுகள் கவனம் செலுத்தியதன் எதிரொலியாக தொற்று எளிதாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும்,  தொற்று எளிதாக பரவக்கூடிய ஆபத்து உள்ளவர்களை கண்டறிந்து அவர்களை பராமரிப்பதில் அரசுகள் முன்னுரிமை அளித்ததன் மூலம் இறப்பு விகிதம் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.  

மாநிலந்தோறும் உருவாக்கப்பட்டுள்ள சிறந்த மருத்துவக் உட்கட்டமைப்பு, நோயாளிகள் விரைவில் நோய்த் தொற்றிலிருந்து மீண்டு வர உதவி செய்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடையேயான மீட்பு விகிதம் ஜுன் நடுப்பகுதி முதல் இன்றுவரை 53 சதவீதத்திலிருந்து  64 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவ நிபுணர்களால் தெரிவிக்கப்பட்ட புள்ளிவிவரத்தின்படி, கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 47 ஆயிரத்து 803 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நோய்த்தொற்று செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 14 லட்சத்து  83 ஆயிரத்து  156ஆக உயர்ந்துள்ளது. அதே  நேரத்தில் கொரோனா பாதிப்பால் இந்தியாவில் இதுவரை 33 ஆயிரத்து 425 பேர் உயிரிழந்துள்ளனர் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.