இந்திய அரசியல் நிர்ணய சபையானது கடந்த 1949-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந்தேதி, இந்திக்கு அலுவல் மொழி அந்தஸ்தை வழங்கியதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 14-ந்தேதி இந்தி தினமாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான இந்தி தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி நாட்டு மக்களுக்கு ‘டுவிட்டர்’ மூலம் வாழ்த்து தெரிவித்து இருந்த உள்துறை மந்திரி அமித்ஷா, சர்வதேச அளவில் நமது நாட்டை அடையாளப்படுத்த இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கு தமிழகத்தைச் சேர்ந்த பல தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். 

இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஹைதராபாத் மக்களவை உறுப்பினர் ஓவைசி , இந்தியர்கள் அனைவரின் தாய்மொழியும் இந்தி அல்ல. இந்தியாவின் பன்முகத்தன்மையையும், பல மொழிகளின் அழகையும் உங்களால் பாராட்ட முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் 29 ன்படி அனைத்து இந்தியர்களுக்கும் தனி மொழி, கலாசாரம் ஆகியவற்றை பின்பற்றும் உரிமைகள் உண்டு. இந்தி மொழி, இந்து மதம், இந்துத்துவா கொள்கையைவிட இந்திய நாடு பெரியது என்று ஓவைசி தெரிவித்துள்ளார்.