இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பின் மையமாக திகழ்கிறது. பல்வேறு நெருக்கடி மற்றும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் முழு வான்வெளியையும் தடையின்றி கண்காணிக்கும் திறனை இந்தியா பெற்றுள்ளது. 

இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் இந்தியா அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பின் மையமாக உள்ளது எனவும் 24 மணிநேரமும் முழு வான் வெளியையும் தடையின்றி கண்காணிக்கும் திறனை இந்தியா கொண்டுள்ளது எனவும், இந்திய விமானப் படையின் தலைமை ஏர் மார்ஷல் ஆர் கே எஸ் பதாரியா கூறியுள்ளார். 

சர்வதேச அளவில் மிகப்பெரிய விமான கண்காட்சியான ஏர் இந்தியா-2021 விமான கண்காட்சியை இந்தியா ஏற்பாடு செய்துள்ளது. பெங்களூரிலுள்ள எலஹகா விமானப்படை தளத்தில் கண்காட்சி தொடங்கியுள்ளது. இதை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தொடங்கி வைத்தார். 

வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி வரை இக்கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 540 வெளிநாட்டு நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள விண்வெளி பயன்பாட்டிற்கான நவீன கண்டுபிடிப்புகள், இந்திய பாதுகாப்பு துறையின் பொது நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்திகழ்ச்சியில் கலந்து கொண்ட ஏர் தலைமை மார்ஷல் ஆர்.கே.எஸ் பதாரியா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பாதுகாப்பு துறையில் உள்நாட்டு திறனை வளர்ப்பதற்காக அரசாங்கம் பல சீர்திருத்தங்களையும், கொள்கை மாற்றங்களையும் செய்துள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் அடுத்த தலைமுறை தொழில் நுட்பங்களையும் உபகரணங்களையும் உருவாக்க இது நமது கூட்டாளர்களை ஊக்குவிக்கும். 

வரவிருக்கும் அடுத்த 10 ஆண்டுகளில் உலகளாவிய விண்வெளி விநியோகச் சங்கிலியில் இந்தியா விண்வெளி துறையின் ஒரு முக்கிய புள்ளியாக செயல்படும். புவி அரசியல் மற்றும் பாதுகாப்பைப் பொறுத்தவரையில், இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பின் மையமாக திகழ்கிறது. பல்வேறு நெருக்கடி மற்றும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் முழு வான்வெளியையும் தடையின்றி கண்காணிக்கும் திறனை இந்தியா பெற்றுள்ளது. அதற்கான அனைத்து உபகரணங்களும் இந்தியாவிடம் உள்ளது. உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் இந்தியா அத்தகைய திறனை பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.