தொலைத்தொடர்பு உபகரணங்களைப் பொருத்தவரையில் சீனாவில் நம்பகமான ஒரு சில நிறுவனங்களிடமிருந்து மட்டுமே அவைகள் வாங்கப்படும் என இந்தியா அறிவித்துள்ளது. இது சீனாவுக்கு இந்தியா கொடுக்கும் அடுத்த மரண அடியாகவே கருதப்படுகிறது. 

இந்திய எல்லையில் சீனா தொடர்ந்து அத்துமீறி வந்த நிலையில், உலக அளவில் சீனாவின் செல்வாக்கை குறைக்க இந்தியா பகிரத முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக சீனாவின் பொருளாதார முதுகெலும்பை உடைக்க இந்தியா திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது.  இதனால் ஏற்கனவே பல  சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்த நிலையில் தற்போது தொலைத்தொடர்பு உபகரணங்கள் கொள்முதல் செய்வதிலும் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தொலைதொடர்பு துறையில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், 

சீனாவின் ஒரு சில நம்பகமான நிறுவனங்களின் பட்டியலை அரசாங்கம் விரைவில் வெளியிடும் என்றும், நாட்டில் தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகளை உருவாக்க அந்தக் குறிப்பிட்ட நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே உபகரணங்கள் இனி வாங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். விரைவில் தொலைத்தொடர்பு உபகரணங்கள் வாங்க சீனாவின் நம்பகமான சில நிறுவனங்களின் பட்டியலை மோடி அரசு உருவாக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால்  பல சீன பெருநிறுவனங்கள் இந்த கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் சீனா அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்திய தொலைதொடர்புத் துறையில் சீனா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் அந் நிறுவனங்கள் பெரும் பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடும் நிலை உருவாகி உள்ளது. 

விரைவில் அதற்கான பட்டியலை சைபர்  பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் தயார் செய்வார் எனவும்,  நம்பகமான நிறுவனங்கள் மற்றும் தயாரிப்புகளின் பட்டியல் ஒரு பிரத்யேக குழுவால் அங்கீகரிக்கப்படும் என்றும், அந்த குழுவில் சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் அமைச் சகங்களின் உறுப்பினர்களும் இடம் பெறுவர் என்றும், மேலும் அதில் இடம்பெறும் இரண்டு உறுப்பினர்கள் தொழில் மற்றும் சுயாதீன நிபுணர்களாக இருப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இதை சீன எல்லைப் பிரச்சினையுடன்  தொடர்புபடுத்த மறுத்த ரவிசங்கர் பிரசாத், உள்நாட்டு நிறுவனங்களால் உருவாக்கப்படும் உபகரணங்களை மேம்படுத்துவது மற்றும் இந்திய தொலைதொடர்பு துறையின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதே நோக்கம் என கூறியுள்ளார். 

இந்த நடவடிக்கையால் பராமரிப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் பாதிக்காது என்றும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம் நாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கான சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.