தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக்கு பிறகு இரவு ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா 2வது அலை மிக வேகமாக பரவி பரவுகிறது. மறுபுறம் உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது தினசரி பாதிப்பு 10,000ஐ நெருங்கி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டும் கொரோனா கட்டுக்குள் வரவில்லை. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாகவும், இரவு நேரத்தில் ஊரடங்கை செயல்படுத்துவது குறித்தும் சுகாதாரத் துறை அதிகாரிகள் உள்பட பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ராஜூவ் ரஞ்சன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்தில் இருந்து சென்னை வருகிறார். இதனையடுத்து, தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனைக் கூட்டம்  முதல்வர் முகாம் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில், தலைமைச் செயலாளர் ராஜூவ் ரஞ்சன், சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த ஆலோசனைக்கு பின் மேலும், புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இரவு ஊரடங்கு தொடர்பாக அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.