மகளிருக்கான மகப்பேறு கால நிதியுதவியை 18 ஆயிரத்திலிருந்து 24 ஆயிரம் ரூபாயாக உயர்த்த தமிழக அரசு முன்வர வேண்டும் என பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மகளிருக்கான மகப்பேறு கால நிதியுதவியை 18 ஆயிரத்திலிருந்து 24 ஆயிரம் ரூபாயாக உயர்த்த தமிழக அரசு முன்வர வேண்டும் என பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் மகப்பேற்றின் போது தாய்மார்களின் இறப்பு விகிதம் ஐ.நா நிர்ணயித்த அளவை விட, இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகமான பேறுகால இறப்புகள் கொண்ட மாநிலங்களான பீகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட, அஸ்ஸாம் ஆகியவற்றில் எம்.எம்.ஆர் விகிதம் 175லிருந்து 161ஆக குறைந்துள்ளது. கேரளாவில் தாய் இறப்பு விகிதம் கடந்த 6 ஆண்டுகளில் 66லிருந்து 40ஆக குறைந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மகப்பேற்றின் போது தாய்மார்களின் இறக்கும் விகிதம் அதிகரித்து வருவதாகவும், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், 2017-18 காலத்தில் மகப்பேற்றின் போது தாய்மார்கள் இறக்கும் விகிதத்தில் தமிழ்நாடு 3வது இடத்திலிருந்து 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக கேரளம், மராட்டியத்துக்கு அடுத்த படியாக இருந்த தமிழகம் இப்போது தெலுங்கானாவுக்கு பின் சென்றிருப்பது கவலையளிக்கிறது. 2016-2017 ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த விகிதம் கேரளத்தில் 13, மராட்டியத்தில் 8, ஆந்திரம் தெலுங்கானம் தலா 7 குறைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் 2 மட்டுமே குறைந்துள்ளது. ஆந்திரத்துடன் சமநிலையில் உள்ள தமிழகம் விரைவில் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்படலாம்.
தமிழகத்தில் தாய்மார்கள் இறப்பு விகிதம் 58 ஆக உள்ள நிலையில், அதை 2023 ஆம் ஆண்டில் 25 ஆக குறைக்க வேண்டும். இது மிகவும் சவாலானது. ஆரம்ப சுகாதார நிலையங்களையும், 108 அவசர ஊர்திகளையும் அதிகரிப்பது உள்ளிட்ட மருத்துவக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட வேண்டும். யூடியூப் வழிகாட்டுதலில் மகப்பேறு பார்க்கும் அறிவீனம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. அதை அகற்றுவதுடன் மகப்பேறு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மகளிருக்கான மகப்பேறு கால நிதியுதவியை 18 ஆயிரத்திலிருந்து 24 ஆயிரம் ரூபாயாக உயர்த்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
