income tax raid in vivek house
ஜெயா தொலைக்காட்சியின் சிஇஓ விவேக் ஜெயராமனின் 20 க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களுக்காக தொடங்கப்பட்ட 100 வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கி வைத்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவின் உறவினர்கள் மற்றும் அவரது குடும்பத்துடன் தொடர்புடையவர்களின் வீடுகள், அலுவலகங்கள், நிறுவனங்களில் வருமான வரி அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை, தஞ்சை, மன்னார்குடி, திருச்சி, கோடநாடு, நாமக்கல், கர்நாடக மாநிலம் பெங்களூரு, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத், மற்றும் புதுச்சேரி, டெல்லி உள்ளிட்ட 187 இடங்களில் 1,600-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
சசிகலா உறவினர்களில் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் போலி நிறுவனங்களின் பெயரில் 150 கோடிரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. இந்த சோதனையில் அதிக எண்ணிக்கையில் ரூபாய் நோட்டுகளும், கிலோ கணக்கில் தங்க கட்டிகளும் சிக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதே போன்று ஜெயா தொலைக்காட்சியின் சிஇஓ விவேக் ஜெயராமன் வீட்டில் நடந்த ரெய்டில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றதாக தெரிகிறது. அந்த ஆவணங்களை ஆய்வு செய்த அதிகாரிகள் அசந்து போயுள்ளனர். தோண்ட, தோண்ட சுரங்கம் போல் வந்த போலி நிறுவனங்கள் குறித்த தகவலால் அவர்க்ள மிரண்டு போனதாக கூறப்படுகிறது.
20 க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதும், அதற்காக தொடங்கப்பட்ட வங்கி கணக்குகள் மூலம், செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை கோடிக்கணக்கில் பரிமாற்றம் செய்ததும் அந்த ஆவணங்கள் மூலம் தெரியவந்தது.
இதையடுத்து விவேக் செயல்படுத்திய வந்த 100க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர். மேலும் போலி நிறுவனங்கள் தொடர்பாக ஆவணங்ககும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் மதிப்பு 1200 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சோதனையின் போது சசிகலாவின் சகோதரர் திவாகரன், அண்ணி இளவரசி, விவேக் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடங்களில் இருந்துதான் அதிக ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
