வரி ஏய்ப்பு புகாரின்பேரில், தமிழக சாலைப்பணி ஒப்பந்ததாரர் வீடு மற்றும் அலுவலகங்கள் என 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்திவருகின்றனர். 

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சத்துணவுத் திட்டத்திற்கான முட்டை, பருப்பு ஆகிய உணவுப்பொருட்களை கொள்முதல் செய்து, அங்கன்வாடி மற்றும் அரசு பள்ளிகளுக்கு விநியோகம் செய்து வந்த கிறிஸ்டி ஃபிரைடு கிராம் நிறுவனத்தின் உரிமையாளர் குமாரசாமியின் வீடு, அலுவலகங்கள், அவரது நண்பர்கள், ஆடிட்டர் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அண்மையில் அதிரடி சோதனை நடத்தினர்.

வரி ஏய்ப்பின் பேரில் நடத்தப்பட்ட இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், வருமான வரித்துறை அடுத்த அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகிறது. 

தமிழக சாலை பணிகள் ஒப்பந்ததாரரான செய்யாதுரை மற்றும் அவரது மாகன் நாகராஜன் ஆகியோர் இணைந்து நடத்திவரும் எஸ்பிகே நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கீழ்முடிமன்னார் கோட்டை பகுதியை சேர்ந்தவர் செய்யாதுரை. இவர் தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணியாளராக உள்ளார். இவரது மகன் நாகராஜன். தந்தையும் மகனும் இணைந்து எஸ்பிகே என்ற பெயரில் கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். 

கல்குவாரி, கட்டுமான நிறுவனம், நூற்பு ஆலை, சாலை ஒப்பந்தப்பணிகள் என பல்வேறு தொழில் செய்து வருகின்றனர். வருமான வரித்துறையினருக்கு கிடைத்த வரி ஏய்ப்பு புகாரின் பேரில் நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் செய்யாத்துரை, நாகராஜுக்கு சொந்தமான கட்டுமான நிறுவனம், வீடு, மற்றும் நிர்வாகிகளின் அலுவலகம் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் தேனாம்பேட்டை, போயஸ் கார்டன், நந்தனம் மற்றும் அருப்புக்கோட்டை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 30 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டுவருகின்றனர். 

இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் ரூ.80 கோடி வரை ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து சோதனை நடைபெற்றுவருகிறது.

கிறிஸ்டி நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடந்து முடிந்து, அந்த பரபரப்பு அடங்கும் முன்னர், வருமான வரித்துறை அடுத்த அதிரடி சோதனையை மேற்கொண்டிருப்பது பரபரப்பை மேலும் அதிகமாக்கியுள்ளது.