income tax raid continue 3rd day
ஜெயா தொலைக்காட்சி உள்ளிட்ட சசிகலா மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று 3 அவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்களுக்கு சொந்தமான இடங்கள், சென்னையில் உள்ள ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் , நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் அலுவலகம் ஆகியவற்றில் கடந்த 9ந்தேதி அதிகாலை முதல் வருமான வரி துறை சோதனை நடத்தியது.
சசிகலாவின் சகோதரர் திவாகரன், இளவரசியின் மகன் விவேக், மகள் கிருஷ்ணப்ரியா ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடந்தது.

முறையாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத நிலையில் வருமான வரி துறை சோதனை நடைபெறுகிறது. வருமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று 2வது நாளாகவும் சோதனை நடைபெற்றது.
இந்த நிலையில் திருவாரூரின் மன்னார்குடியில் உள்ள திவாகரனுக்கு சொந்தமான கல்லூரி, ஜெயா டிவி அலுவலகம், நமது எம்.ஜி.ஆர். அலுவலகம், மிடாஸ் மதுபான ஆலை, ஈக்காட்டுதாங்கலில் உள்ள திவாகரனின் உறவினர் வீடு உள்ளிட்ட 40 இடங்களில் 3வது நாளாக இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதே போன்று கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூரில் உள்ள தினகரனின் ஜோதிடர் சந்திரசேகரன் வீட்டில் 3வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தங்கம், சொத்துக்கள் வாங்கி குவித்தது, பங்குசந்தையில் முதலீடு செய்தது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரியிலுள்ள லட்சுமி ஜூவல்லர்ஸ் கடை, லட்சுமி குழுமத்தின் கிளை நிறுவனங்கள், நட்சத்திர விடுதி, கோடநாடு அருகிலுள்ள கர்சன் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 3வது நாளாக சோதனை நடந்து வருகிறது.
