income tax officers sealed advocate senthil room

நாமக்கல்லில் உள்ள சசிகலாவின் வழக்கறிஞர் செந்திலின் வீட்டில் உள்ள அவரது அறைக்கு வருமான வரித்துறையினர் சீல் வைத்துள்ளனர்.

வருமான வரி சோதனை:

போலி நிறுவனங்கள் தொடங்கி நஷ்ட கணக்கு காட்டி வருமான வரி ஏய்ப்பு செய்ததாக, சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என சசிகலாவுடன் தொடர்புடைய அனைவரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

நேற்று முன் தினம் தொடங்கிய சோதனை இன்று மூன்றாவது நாளாக, 40 இடங்களில் நடந்துவருகிறது. முதல் 187 இடங்களிலும் இரண்டாவது நாளான நேற்று 147 இடங்களிலும் சோதனை நடைபெற்றது.

மூன்றாவது நாளாக தொடரும் சோதனை:

ஜெயா டிவி அலுவலகம், நமது எம்.ஜி.ஆர் அலுவலகம், கோடநாடு பங்களா, கர்சன் எஸ்டேட், மிடாஸ் மதுபான ஆலை, சென்னை திநகரில் உள்ள கிருஷ்ணபிரியா வீடு, சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள விவேக்கின் வீடு, புதுச்சேரி ஆரோவில்லில் உள்ள தினகரனின் பண்ணை வீடு உள்ளிட்ட 40 இடங்களில் இன்று மூன்றாவது நாளாக வருமான வரி சோதனை நடைபெற்றுவருகிறது.

இந்த சோதனையில் இதுவரை 60 போலி நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்களும் கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்த 1000 கோடி ரூபாய் பணத்திற்கான ஆவணங்களும் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வழக்கறிஞர் செந்தில் வீட்டில் சோதனை:

நாமக்கல்லில் மோகனூர் சாலையில் உள்ள சசிகலா மற்றும் தினகரனின் வழக்கறிஞர் செந்திலின் வீட்டிலும் மூன்று நாட்களாக வருமான வரி சோதனை நடைபெற்றுவருகிறது. கடந்த 7 ஆண்டுகளாக சசிகலாவுடன் நெருங்கிய தொடர்பிலிருந்து வரும் செந்தில், பல்வேறு தொழில்களிலும் பங்குதாரர்களாக உள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் ஏராளமான சொத்துக்களை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செந்திலின் நண்பர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

செந்திலின் வீட்டில் சோதனை நடைபெற்றுவரும் நிலையில், வருமான வரித்துறையினர் அவரது வீட்டில் நுழைந்தது முதல் இதுவரை செந்தில் வீட்டிற்கு வரவில்லை. அவர் மொபைல் போனை சுவிட்ச் ஆஃப் செய்துவைத்திருப்பதால் வருமான வரித்துறை அதிகாரிகளால் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை.

இதுவரை செந்தில் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ஏராளமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் ஆவணங்கள் கைப்பற்றி உள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் செந்திலின் சகோதரியை அழைத்து சென்று வங்கியின் லாக்கரில் இருந்து ஏராளாமான தங்க நகைகள் மற்றும் ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர். 

செந்திலின் அறைக்கு சீல்:

மூன்றாவது நாளாக இன்றும் சோதனை நடைபெற்றுவரும் நிலையில், இதுவரை அதிகாரிகளால் செந்திலை தொடர்பு கொள்ள முடியவில்லை. செந்திலின் வீட்டில் உள்ள அவரது தனி அறை பூட்டப்பட்டுள்ளது. செந்தில் வராததால் அந்த அறையில் சோதனை நடத்த முடியவில்லை. செந்திலை தொடர்புகொள்ள முடியாததால், பூட்டப்பட்ட அந்த அறைக்கு வருமான வரி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தற்போதும் சோதனை தொடர்ந்து நடந்துவரும் நிலையில், இதுவரை செந்தில் எங்கு இருக்கிறார் என்பது தொடர்பான தகவல் தெரியவில்லை.