ஆசிரியர்கள் உள்பட அரசு ஊழியர்களுக்கு ஊக்க ஊதியம் கிடையாது என தலைமைச் செயலர் விளக்கம் அளித்துள்ளார். ஆசிரியர்கள் உள்பட அரசு ஊழியர்களுக்கு உயர் கல்வித்தகுதிக்கான ஊக்க ஊதியம் வழங்கப்படாது என்றும்,  கடந்த 10.3.2020-க்குப் பிறகு பணிநியமனம் பெற்றவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும் எனவும் தமிழக தலைமைச் செயலர் விளக்கம் அளித்துள்ளார்.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள்,  கல்லூரி ஆசிரியர்கள், இன்ஜினியர்கள், மருத்துவர்கள் போன்றோருக்கு உயர்கல்வித்தகுதிக்கு ஊக்க ஊதியம் (அட்வான்ஸ்டு இன்கிரிமென்ட்) வழங்கப்படும். அதேபோல், சார்நிலைப்பணியாளர்கள் கணக்குத்தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் ஊக்க ஊதியம் பெறலாம். 

 இந்த நிலையில், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உயர்கல்வி ஊக்க ஊதியம் வழங்குவதை ரத்துசெய்து தமிழக அரசு கடந்த 10.3.2020 அன்று அரசாணை வெளியிட்டது.  இந்த அரசாணை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களுக்குப் பொருந்துமா என்ற குழப்பம் இருந்து வந்தது. ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்குவது குறித்து கருவூலம் மற்றும் கணக்குத்துறை அரசிடம் விவரம் கோரியிருந்தது. 

 

இந்த நிலையில்,  தமிழக அரசின் தலைமைச் செயலர்  கே.சண்முகம் விளக்கம் அளித்து ஓர் உத்தரவை வெளியிட்டுள்ளார். அதன்படி, அரசு ஊழியர்களுக்கு ரத்துசெய்யப்பட்ட ஊக்க ஊதியம் தொடர்பான அரசாணை ஆசிரியர்கள், பேராசிரியர்கள், இன்ஜினியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும் என்றும் 10.3.2020-க்குப் பிறகு பணிநியமனம் செய்யப்பட்டவர்களுக்கு இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.