கரூர் மாவட்ட திமுகவினர் மீது தாக்குதல்.. நள்ளிரவில் நடந்த கல்வீச்சு.. கோவையில் பதற்றம் !!
கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபட வந்திருந்த கரூர் மாவட்ட திமுகவினர் தங்கியிருந்த வீடு மற்றும் அவர்களது கார் மீது, மர்மநபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களான கரூர் மாவட்ட திமுகவினர், கோவை மாவட்டத்தில் தங்கி தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, கரூர் மாவட்ட விவசாய அணி செயலாளர் சண்முகம் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர், மாநகராட்சியின் 88-வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளரின் உறவினர் சந்தோஷ் என்பவருக்கு சொந்தமாக செங்குளம் அருகே உள்ள தோட்டத்து வீட்டில் நேற்றிரவு தங்கி இருந்தனர். இந்த நிலையில், நள்ளிரவு 12.30 மணி அளவில் 10 பேர் கொண்ட கும்பல் திடீரென அந்த வீட்டின் மீதும், வாசலில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீதும் கற்கலை வீசி தாக்கினர்.
இந்த திடீர் தாக்குதலால் வீட்டின் கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் கார் கண்ணாடி ஆகியவை சேதமடைந்தது. இதைத்தொடர்ந்து கரூர் மாவட்ட திமுகவினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த திமுக கோவை மாவட்ட நிர்வாகிகள் காவல்துறையில் புகார் அளித்தனர்.
அங்கு சென்ற காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தது தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் காரணமாக அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது. தற்போது இந்த சம்பவம் கோவை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.