2024 தேர்தலில் எல்லா தொகுதிகளும் அதிமுகவுக்குதான் .. எதிர்காலத்தில் இபிஎஸ்தான் முதல்வர்.. தங்கமணி தாறுமாறு!
வரும் 2024 மக்களவை தேர்தலில் பொதுமக்கள் திமுகவுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். அனைத்து இடங்களிலும் அதிமுக வெற்றி பெறும் என்று முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு மின் கட்டண உயர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக முன்னாள் மின் துறை அமைச்சர் தங்கமணி நாமக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தாமல் எல்லோருக்கும் தடையில்லா மின்சாரம் வழங்கினோம். மேலும் தமிழகம் மின் மிகை மாநிலமாக இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்தால், மின் கட்டணத்தை குறைக்கும் வகையில் மாதந்தோறும் மின்சாரம் கணக்கீடு செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்தனர். தற்போது ஆட்சிக்கு வந்து ஓராண்டில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்துகிறார்கள்.
இதையும் படிங்க: 100 யூனிட் இலவசம் வேண்டாமா.? இந்த படிவத்தை பூர்த்தி பண்ணுங்க.. செந்தில் பாலாஜி அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.
மேலும், ஒரு வீட்டுக்கு ஓர் இணைப்பு என்கிறார்கள். இதனால் ஒரே வீட்டில் தாய், தந்தை ஒரு பகுதியிலும், மகன், மருமகள் மற்றொரு இன்னொரு பகுதியிலும் வசித்தால் 2 மின் இணைப்பு வைத்திருந்தால் அவை ஒன்றாக்கப்படும். இதன்மூலம் 100 யூனிட் இலவச மின்சாரம் பெறும் வாய்ப்பை இழந்துவிடுவார்கள். இதனால் தமிழகத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்கப்படுவார்கள். மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்றால் முதலில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதல் பெற வேண்டும். பின்னர் பொதுமக்கள் கருத்தைக் கேட்ட பிறகுதான் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். தற்போதை மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மின்சாரக் கட்டணம் உயர்வுக்கான பட்டியலை அவரே தயார் செய்து ஒழுங்குமுறை வாரியத்துக்கு அனுப்பி வைக்கிறார்.
இதையும் படிங்க: மின் கட்டண உயர்வுக்கு இதுதான் காரணம்... தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடி!!
மத்திய அரசு மீது வீண் புகாரை கூறி மின் கட்டண உயர்வுக்கு மத்திய அரசே காரணம் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுகிறார். மத்திய அரசும், வங்கிகளும் நஷ்டத்தில் உள்ள அரசு நிறுவனங்களுக்கு கடன் வழங்குவது தொடர்பாக இப்படி கடிதம் எழுதுவார்கள். ஆனால், ஆட்சியாளர்கள்தான் அதை சமாளிக்க வேண்டும். மின்வாரியத்தின் கடனை அடைக்க ரூ.13,000 கோடி, மின்வாரியத்திற்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ரூ.3,000 கோடிதான் கொடுக்கப்பட்டது. 13,000 கோடி ரூபாய் கொடுத்திருந்தால் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை வந்திருக்காது. கடந்த அதிமுக ஆட்சியில் விசைத்தறிக் கூடங்களுக்கு மாதம் 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்கினோம். திமுக ஆட்சிக்கு வந்தால் 1,000 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவோம் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்தனர்.
தற்போது 750 யூனிட்ட மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். அதற்கு மேல் ஒரு யூனிட்டுக்கு 70 பைசா உயர்த்தப்படும் என்கிறார்கள். தமிழக அரசின் நிர்வாகத் திறமையின்மையால்தான் கடும் நெருக்கடியான நேரத்தில், பொதுமக்களைப் பற்றி சிந்திக்காமல் முதலில் சொத்து வரியை உயர்த்தினார்கள், தற்போது மின் கட்டணத்தையும் உயர்த்தியுள்ளனர், விரைவில் பேருந்து கட்டணத்தையும் உயர்த்துவார்கள். இதனால் திமுகவுக்கு வாக்களித்த பொதுமக்கள் எல்லோரும் வெறுப்படைந்துள்ளனர். வரும் 2024 மக்களவை தேர்தலில் பொதுமக்கள் திமுகவுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். அனைத்து இடங்களிலும் அதிமுக வெற்றி பெறும். வருங்காலத்தில் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்பது உறுதியாகிவிட்டது. ” என்று தங்கமணி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திரும்பவும் முதல்ல இருந்து... சீரழிந்த சிஸ்டத்தை சரி செய்ய மீண்டும் அரசியலுக்குள் புகுந்தார் தமிழருவி மணியன்!