In ten days railway dept got additional 2 crore rupess because of busfare hike
பேருந்து கட்டணம் மிகக் குடுமையாக உயர்த்தப்பட்டதால் பொது மக்கள் ரயில்களில் பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால் , ரயில்வே துறைக்கு கடந்த 10 நாட்களில் மட்டும் 2 கோடி ரூபாய்க்கும் மேல் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.
கடந்த 19-ம் தேதி மாலை தமிழக மக்களுக்கு காத்திருந்தது அந்த பேரதிர்ச்சி. அரசுப் பேருந்துகளின் கட்டணத்தை இபிஎஸ் அரசு , கிட்டத்தட்ட 100 சதவீதம் உயர்த்தி உத்தரவிட்டது.
அடுத்தநாள் அதிகாலையில் இருந்தே கட்டண உயர்வு அமலுக்கு வந்ததால் பொது மக்களும், பயணிகளும் திண்டாடிப்போயினர்.

இந்த கட்டண உயர்வால் போக்குவரத்து கழகங்களுக்கு நாள் ஒன்றுக்கு கூடுதலாக 7 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. இதன்மூலம், தினமும் 9 கோடி ரூபாயாக இருந்த இழப்பின் அளவு, 2 கோடி ரூபாயாக குறைந்தது. ஆனால், அதிக அளவில் பேருந்து கட்டணத்தை உயர்த்தியிருப்பதாகக் கூறி, பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பேருந்து கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி, மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்து கட்டண உயர்வுக்கு, பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தின. போராட்டம்,
எதிர்ப்பு காரணமாக தமிழக அரசு திடீரென்று நேற்று முன்தினம் பேருந்து கட்டணத்தை குறைத்தது. ஆனால், பேருந்து கட்டண குறைப்பு என்பது, கண் துடைப்பு நாடகம் என கருத்து தெரிவித்த பல்வேறு தரப்பினர், பேருந்து கட்டண உயர்வை முழுவதுமாக திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

நேற்று தமிழகம் முழுவதும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் ரயில் சேவையை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.. சென்னையில், மின்சார ரெயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்தது.

பேருந்து கட்டணம் உயர்த்தப்படதையடுத்து தெற்கு ரயில்வே சென்னை மற்றும் தமிழகம் எங்கும் கூடுதலாக ரயில் சேவைகளை அதிகரித்தது.
இதையடுத்து சென்னை புறநகர் ரயில்களில், கடந்த 20-ம் தேதி முதல் நேற்று வரை, 8 லட்சம் பயணிகள் கூடுதலாக பயணம் செய்துள்ளனர். இதன் மூலம், ரயில்வே துறைக்கு 2 கோடி ரூபாய்க்கு மேல் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.
