வளமான தமிழகம் - வலுவான தேசிய ஜனநாயகக் கூட்டணி. டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்ததை நான் வரவேற்கிறேன் என்று அமித்ஷா கூறியுள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்று மீண்டும் இணைந்துள்ளார். எடப்பாடி பழனிசாமி மீதான கோபத்தால் சில மாதங்களுக்கு முன்பு இந்த கூட்டணியில் இருந்து வெளியேறிய டிடிவி தினகரன் மீண்டும் அதிமுக கூட்டணியிலேயே ஐக்கியமாகியுள்ளார். தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு முழு மனதுடன் என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன்

டிடிவி தினகரன் இணைந்துள்ளதால் தேசிய ஜனநாயக கூட்டணி பலமடைந்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் தெரிவித்துள்ளனர். மேலும் டிடிவி தினகரனை மனதார வரவேற்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியை அகற்ற இணைந்து செயல்படுவோம் என்று கூறியுள்ளார்.

டிடிவியை வரவேற்ற அமித்ஷா

இந்த நிலையில், என்டிஏ கூட்டணியில் டிடிவி தினகரன் சேர்ந்ததை வரவேற்றுள்ள மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா, வாரிசு அரசியல், ஊழல் செய்வதாக திமுக அரசையும் விளாசித் தள்ளியுள்ளார்.

திமுக அரசு மீது கடும் தாக்கு

இது தொடர்பாக அமித்ஷா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''வளமான தமிழகம் - வலுவான தேசிய ஜனநாயகக் கூட்டணி. டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்ததை நான் வரவேற்கிறேன். திமுகவின் வாரிசு மற்றும் ஊழல் ஆட்சியால் தமிழக மக்கள் சோர்வடைந்து, பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியால், தமிழகம் வளர்ச்சி மற்றும் செழிப்பின் புதிய உயரங்களுக்கு எடுத்து செல்ல இருப்பதை ஆசீர்வதிக்க தயாராக இருக்கின்றனர்'' என்று தெரிவித்துள்ளார்.

அமித்ஷாவுக்கு டிடிவி நன்றி

இதனைத் தொடர்ந்து தன்னை வரவேற்ற அமித்ஷாவுக்கு டிடிவி தினகரன் நன்றி தெரிவித்துள்ளார். ''என்.டி.ஏ கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைந்ததை வரவேற்று வாழ்த்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஊழல் நிறைந்த தி.மு.க.வை தோற்கடித்து, அதிகாரத்தில் இருந்து அகற்றுவதற்காக, நாங்கள் அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் இணைந்து பணியாற்றுவோம் என்று என்.டி.ஏ. கூட்டணி சார்பில் நான் உறுதி அளிக்கிறேன்'' என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.