ராஜஸ்தான் மாநிலத்தில் 24 மாவட்டங்களுக்குட்பட்ட 49 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. இதுகுறித்த அறிவிப்பை தலைமைத் தேர்தல் ஆணையர் ஷ்யாம் சிங் ராஜ்புரோஹித் வெளியிட்டார்.
 
அதன்படி மொத்தமுள்ள 2105 வார்டுகளில் 14 வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளனர். அதிகப்படியாக காங்கிரஸ் கட்சி 961 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து, பாஜக 737 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சை வேட்பாளர்கள் மொத்தம் 386 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இதுதவிர தேசியவாத காங்கிரஸ் 2 இடங்களிலும், பகுஜன் சமாஜ் 16 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

இதையடுத்து, ராஜஸ்தான் முதலமைச்சர்  அசோக் கெலாட் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், எங்களுடைய அரசின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களுக்கு மக்கள் ஆதரவு தெரிவித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த தேர்தலில் மொத்தம் 71.53 சதவீத வாக்குகள் பதிவானது. அஜ்மீரில் மாவட்டம் நசிராபாத்தில் அதிகபட்சமாக 91.57 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக உதய்பூரில் 54.84 சதவீத வாக்குகளும் பதிவானது.