In puducherry Assembly two MLAs were suspended
புதுச்சேரி சட்டப்பேரவையில் மெகாபோனை பயன்படுத்தி பேசி பேரவை செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவித்த என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஜெயபால், அசோக் ஆனந்து ஆகியோரை 2 நாட்கள் சஸ்பெண்ட் செய்து பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் உத்தரவிட்டார்.
புதுவை சட்டப்பேரவையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு உரிய அதிகாரிகள் வழங்கும் விதமாக சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது.
அப்போது குறுக்கிட்ட என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்து, சென்டாக் வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது. ஆளுநர் முயற்சியால் போடப்பட்ட வழக்கில் மாணவர்கள் சேர்க்குமாறு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த விவகாரத்தில் யார் மன்னிப்பு கோரப்போகிறார்கள். இறுதியில் நீதி வென்றது. மாணவர்கள் நலனுக்கு எதிராக அரசு செயல்பட்டது என குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் நாராயணசாமி, பொய்யான தகவலை அசோக் ஆனந்த் தெரிவிக்கிறார் என்றும், பேரவைக்கு வெளியே சென்று யாரிடமோ தொலைபேசியில் பேசிவிட்டு இங்கு மீண்டும் வந்து பேசக்கூடாது என்றார்.
சென்டாக் விவகாரம் குறித்து அப்போது பேரவையில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, என்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர்கள் மெகா போனைக் கொண்டு பேரவையில் பேச முயன்றனர். இதனைத் பார்த்த பேரவை தலைவர் வைத்தியலிங்கம், அதை பறித்து செல்ல உத்தரவிட்டார். இதையடுத்து, பேரவை மார்ஷல்கள், அசோக் ஆனந்த் மற்றும் ஜெயபால் ஆகியோரிடம் இருந்து மெகாபோனை பறித்து சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அசோக் ஆனந்த், ஜெயபால் ஆகியோரை அவை முடியும் வரை சஸ்பெண்ட் செய்ய பேரவை தலைவர் வைத்தியலிங்கம் உத்தரவிட்டார்.
பேரவையில் இருந்து வெளியேறிய என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சென்டாக் விவகாரத்தில் நீதி வென்றது எனக்கூறி பேரவையில் ஊழியர்கள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் ஜெயபால், அசோக் ஆனந்து ஆகியோர் மீண்டும் அவைக்குள் நுழைய முயன்றபோது காவலர்கள் அவர்களை தடுத்து அனுப்பினர்.
