கடந்த சில நாட்களாக தமிழக அரசுக்கு எதிராக பாஜக பல குற்றச்சாட்டுக்களை கூறி வரும் நிலையில் , தற்போது நாடாளுமன்றத்தில் பாஜக கொண்டு வரும் தீர்மானங்களை கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று அக்கட்சி  எம்.பி.க்களுக்கு ஸ்பெஷல் அசைன்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் தமிழகம் வந்த பாஜக தலைவர் அமித்ஷா, இந்தியாவிலேயே தமிழகம் தான் ஊழலில் முதலிடம் வகிக்கிறது என குற்றம்சாட்டினார். மேலும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் சத்துணவுக்கு முட்டை வழங்கியதில் 5000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக ஒரு குண்டை தூக்கிப் போட்டார்.

இதனிடையே தமிழக அரசின் அதிகார மையத்துக்கு நெருக்கமானவராக கருதப்படும் செய்யாதுரை என்ற ஒப்பந்ததாரரின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 80 இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் 160 கோடி ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 100 கிலோ தங்க கைப்பற்றப்பட்டது.

தொடர் குற்றச்சாடடு மற்றும்  ரெய்டுகள் காரணமாக மிக இணக்கமாக இருந்த அதிமுக – பாஜக இடையே கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதிமுக மீது இருந்த கடும் வெறுப்பு காரணமாக  பாஜக ரெய்டு வேலைகளில்  இறங்கியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில பாஜகவுக்கு எதிராக அதிமுக களமிறங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது, இதற்கான அசைன்மெண்ட் அக்கட்சியின் எம்.பி.க்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அதன் முதற்கட்டமாக, நாடாளுமன்றத்தில் பாஜக கொண்டுவரும் மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்புத் தொரிவிக்க வேண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. இதில் எம்.பி.க்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து அதிமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது, அதில் நாளை தொடங்கவுள்ள நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கொண்டு வரப்படவுள்ள  உயர்கல்வி வாரியம் அமைக்கும் மசோதா, அணைகள் பாதுகாப்பு மசோதா போன்றவற்றை கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிமுக அரசு மீது பாஜக கூறிவரும்   ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பிரச்சனைகள் போதாது என்று வருமான வரித்துறையையும் ஏவிவிடுதாக நினைக்கும் அதிமுக, இனி மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து மத்திய பாஜக அரசுக்கு எதிராக களமிறங்குவது என அதிமுக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.