கொரோனா ஊரடங்கு முடியும் நாளில் இருந்து, தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஏப்ரல் 14ம் தேதி வரை அமலில் இருந்த ஊரடங்கு மேலும் 19 நாட்கள் நீட்டிக்கப்படிவதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஊரடங்கு காலத்தில் கடைகள், வணிக வளாகங்கள், பொது போக்குவரத்துகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்,  தமிழகத்தில் இருக்கும் 5 ஆயிரத்திற்கும் அதிகமான டாஸ்மாக் கடைகள்  கிட்டதட்ட 40 நாட்கள் மேலாக அடைக்கப்பட்டுள்ளன. 

இதனால், பல்வேறு இடங்களில் மதுபானம் கிடைக்காத சிலர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சிலர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது, டாஸ்மாக் கடைகளில் திருடுவது உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்தன. ஆனால், 5 வாரங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில் மது கிடைக்காததால் பெரும்பாலான மக்கள்  பாதிக்கப்பட்டதாக தெரியவில்லை. மதுவுக்கு அடிமையாகி, அது இல்லாவிட்டால் வாழவே முடியாது என்று வர்ணிக்கப்பட்டவர்கள் கூட, இப்போது மதுவை மறந்து விட்டு புதிய மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், மதுவிலக்கை அமல்படுத்துவது இது தான் சரியான நேரம் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டர் பதிவில்;- கொரோனா ஊரடங்கு முடியும் நாளில் இருந்து, தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். மதுக்கடைகள் மூடப்படுவதால் அதிகபட்சமாக, 10 மது ஆலை நிறுவனங்கள் மட்டும் தான் பாதிக்கப்படும். ஆனால், ஒன்றரை கோடி குடும்பங்கள் இதனால் நிம்மதியாக வாழும்.  

குடிப்பழக்கம் ஒழிந்தால் - தமிழகத்தின் பொருளாதாரம் தழைக்கும்; வேலைவாய்ப்பு பெருகும்; வறுமை விலகும்; குடும்பங்களில் மகிழ்ச்சி தாண்டவமாடும். இவை சாத்தியமாக, கொரோனா ஊரடங்கு ஆணை விலக்கிக் கொள்ளப்படும் நாளில் இருந்து, மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் பதிவிட்டுள்ளார்.