வாக்குறுதி கொடுத்து ஏமாற்றுவது அழகல்ல.. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துங்க.. திமுகவை அலறவிடும் கேப்டன்.!
புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வூதியம், பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் என எந்த பயனும் இல்லை. இதை உணர்ந்து அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வந்தனர்.
திமுக அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும் என விஜயகாந்த் கூறியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டமானது, 1956-ல் தொடங்கி 1964ம் ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளின் மூலம் 1987ம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் இருந்து வந்தது. இத்திட்டத்தை அதிமுக அரசு கடந்த 31-03-2003ம் தேதியுடன் ரத்து செய்துவிட்டது.
மாற்றாக 31-03-2003ம் முதல் புதிய ஒய்வூதிய திட்டத்தைத கொண்டு வந்தது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வூதியம், பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் என எந்த பயனும் இல்லை. இதை உணர்ந்து அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வந்தனர். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக, அத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, 2006 தேர்தலில் ஆட்சிப் பொறுப்பேற்றதும் அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் என வாக்குறுதி அளித்தது. ஆனால், அந்த வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை. மீண்டும் அதே வாக்குறுதியை 2011, 2021 தேர்தல்களிலும் திமுக அளித்தது குறிப்பிடத்தக்கது.
புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு மேற்கு வங்க அரசு எதிர்ப்பு தெரிவித்ததோடு அத்திட்டத்தில் இணையவும் இல்லை. மாறாக பழைய ஓய்வூதிய திட்டத்தையே நடைமுறைப்படுத்தி வருகிறது. இதேபோலவே, திரிபுரா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் அரசுகளும் புதிய ஓய்வூதிய திட்டத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டுள்ளன.
தங்கள் தந்த தேர்தல் வாக்குறுதியின்படி பஞ்சாபில் உள்ள ஆம் ஆத்மி அரசும் பழைய ஓய்வூதிய திட்டத்தை தற்போது கொண்டு வந்துள்ளது. ஓட்டு வங்கியாக மட்டுமே பயன்படுத்தும் அவர்களை தேர்தல் காலங்களில் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றுவதும் அழகல்ல. எனவே திமுக அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தினை உடனடியாக கொண்டு வந்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நலனை காத்திட வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.