பெங்களூரு சிறையில் சசிகலா உடன் இருந்த இளவரசிக்கு 2-வது முறையாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா தண்டனை முடிந்து விடுதலையாவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் திடீரென காய்ச்சல் மற்றும் மூச்சு திணறல் பாதிப்பு காரணமாக பெங்களூரு பவுரிங் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை மூச்சு திணறல் அதிகமிருந்ததால், அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்க மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது. பவுரிங் மருத்துவமனையில் சிடி ஸ்கேன் இயந்திரம் பழுதடைந்துள்ளதால், விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், நுரையீரலில் தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டது. இதனையடுத்து விக்டோரியா அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கோவிட்-19 சிறப்பு மருத்துவமனை பிரிவுக்கு சசிகலா மாற்றம்  செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சசிகலாவுடன் பெங்களூர் சிறையில் உள்ள இளவரசிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. இதனையடுத்து,  இளவரசிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அதற்கான முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இளவரசிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரை தனிமைப்படுத்தி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.