மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்காமல் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதிமுக செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்  அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, முன்னணி நிர்வாகிகள் உள்பட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளதால், சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே முதல்வர் குறித்து நேரடி வாக்குவாதம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி நடத்திவரும் ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. அதேநேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு நிர்வாகிகளான துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி, முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோருடன் ஓபிஎஸ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிமுக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.