நீங்கள் பாஜகவிலிருந்து 2 எம்எல்ஏக்களைதான் தூக்குவீர்கள் ஆனால் நாங்கள் உங்கள் ஆட்சியையே தூக்கி விடுவோம் என சமீபத்தில் பாஜகவில் இணைந்துள்ள திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா எச்சரித்துள்ளார். 

நீங்கள் பாஜகவிலிருந்து 2 எம்எல்ஏக்களைதான் தூக்குவீர்கள் ஆனால் நாங்கள் உங்கள் ஆட்சியையே தூக்கி விடுவோம் என சமீபத்தில் பாஜகவில் இணைந்துள்ள திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா எச்சரித்துள்ளார். தர்மபுரி திமுக எம்பி செந்தில் குமார் பாஜகவின் இரண்டு எம்எல்ஏக்கள் தங்களின் தொடர்பில் இருப்பதாகவும் அவர்களை தூக்கி விடுவோம் என கூறியுள்ள நிலையில் சூர்யா சிவா இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.

திமுகவின் முக்கிய எம்.பியும், சிறந்த பேச்சாளரும், நாடாளுமன்ற வாதியாகவும் இருந்து வருபவர் திருச்சி சிவாவின். இவரின் மகன் சூர்யா பல்வேறு அரசியல் காரணங்களால் பாஜகவில் இணைந்துள்ளார். இது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சூர்யா, திமுகவில் உழைப்புக்கு மரியாதை இல்லை, பல ஆண்டுகளாக திமுகவில் உழைத்தும் தனக்கு எந்த வளர்ச்சியும் இல்லை என்பதால் பாஜகவை தேடி சென்றிருப்பதாக கூறினார். அதாவது எதிர்க் கட்சியாக அதிமுக இருந்தாலும் உண்மையான எதிர்க்கட்சி பாஜகதான் என்ற பிம்பத்தை பாஜக கட்டமைத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பிரபலமான முக்கிய புள்ளிகள் மற்றும் திமுகவில் முக்கிய புள்ளிகளின் வாரிசுகள், உறவினர்களை பாஜகவில் இணைப்பதற்கான முயற்சியில் அக்கட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில்தான் திருச்சி சிவாவின் மகன் சூர்யாவை பாஜகவுக்கு இழுத்துள்ளது அக்காட்சி. திமுகவில் முக்கிய புள்ளியின் மகனையே பாஜகவுக்கு தூக்கியதை பாஜகவினர் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு டுவிட்டரில் பதிலடி கொடுக்கும் வகையில் தர்மபுரி திமுக எம்பி மருத்துவர் செந்தில் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவிட் செய்துள்ளார் அதில், திமுகவில் எந்த பதவியிலும் இல்லாத ஒருவர் உங்கள் கட்சியில் இணைவதை கொண்டாடும் பாஜகவினருக்கு ஒரு தகவல், உங்கள் கட்சியில் இருந்து இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் எங்கள் தொடர்பில் உள்ளனர். எங்கள் தலைமை கண்ணசைத்தால் அந்த இரண்டு பேரையும் தூக்கி விடுவோம் எனக் கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த இரண்டு எம்எல்ஏக்கள் யார் என்ற கேள்வியை சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள சூர்யா சிவா, திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அதில் கூறியுள்ள அவர், திமுகவில் உழைப்புக்கேற்ற வளர்ச்சி இல்லை, கட்சிக்காக நிறைய உழைத்திருக்கிறேன் பல அரசியல் கட்சி தலைவர்களின் வாரிசுகளுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஆனால் உங்களுக்கு ஏன் கிடைக்கவில்லை என பலர் என்னை கேட்கின்றனர். அவர்களுக்கெல்லாம் அவர்கள் தகப்பன்மார்கள் கட்சியின் தலைமைக்கு அழுத்தம் கொடுத்து அவர்களுக்கு பதவி வாங்கி கொடுக்கிறார்கள். ஆனால் எனக்கு அப்படி இல்லை, எனக்கும் என் தந்தைக்கும் இருக்கிற முரண்பாடு காரணமாக அவர் எனக்கு ஒத்தாசை செய்யும் சூழ்நிலை இல்லை. இதனால் திமுக எம்பி கனிமொழி சார்ந்து அவர்களுக்கு ஆதரவாளராக இருந்தேன், ஆனால் இப்போது கனிமொழியையோ ஓரம்கட்டப்படுகிறார்.

இந்த நிலையில்தான் நான் இனி திமுகவில் வளர வாய்ப்பு இல்லை, அதனால்தான் நான் என்னுடைய அரசியல் எதிர்காலத்திற்காக பாஜகவை தேர்ந்தெடுத்திருக்கிறேன். நான் எடுத்த இந்த முடிவால் இப்போது தமிழகம் முழுவதும் நான் யார் என்று தெரிந்திருக்கிறது. இதற்காகத்தான் இந்த முடிவு எடுத்தேன், அதேபோல் பாஜக மாநில தலைமையிடம் நான் உழைக்கிறேன் எனக்கு அங்கீகாரம் கொடுங்கள் என்றுதான் நான் கூறினேன். அதற்கு அவர்களும் நீங்கள் காட்சிக்காக உழையுங்கள் நீங்கள் எதிர்பார்ப்பதை விட அதிகமாக நாங்கள் தருகிறோம் என்று தான் அவர்களும் சொல்லி இருக்கிறார்கள். பாஜகவை தமிழகத்துக்குள் நுழைய விடக்கூடாது என்பதற்காகத்தான் தொடர்ந்து அக்கட்சி மீது திமுக அவதூறு கருத்துக்களை கூறி வருகிறது. மதத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள், பிரிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டி வருகிறார்கள். ஆனால் உண்மையிலேயே மோடி நேர்மையாளர் எனக் கூறினார்.

தர்மபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் பாஜகவின் இரண்டு எம்எல்ஏக்கள் தங்களின் தொடர்பில் இருப்பதாகவும் தலைவர் ஸ்டாலின் கண்ணசைத்தால் இருவரையும் தூக்கி விடுவோம் என கூறியிருக்கிறாரே என்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சூர்யா அவர்கள் எங்கள் இரண்டு எம்எல்ஏக்களை தான் தூங்குவார்கள் ஆனால் நாங்கள் அவர்களின் ஆட்சியையே தூக்கி விடுவோம். இந்த பூச்சாண்டி எல்லாம் பாஜக பயப்படாது என கூறியுள்ளார்.