தைரியம் இருந்தால் என்னுடைய ஆட்சியைக் கலைத்து பாருங்கள் என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே பாஜகவுக்கு சவால் விடுத்துள்ளார்.
விஜயதசமி பண்டிகையையொட்டி சிவசேனா கட்சித் தலைவரும் மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே மும்பையில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “மும்பையில் சொகுசு கப்பலில் போதைப் பொருள் சிக்கிய விவகாரத்தில் பாஜக தலைவர்கள் என்னை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். கடந்த மாதம் குஜராத் முந்த்ரா துறைமுகத்தில் பல ஆயிரம் கோடி மதிப்பிலான 3,000 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டதே. அதை மறந்துவிட்டீர்களா? மகாராஷ்டிராவில் மட்டும்தான் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதா?

உங்கள் போதை தடுப்பு பிரிவினர் கஞ்சாவை மீட்கும்போது, எங்கள் போலீசார் ரூ.150 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை கைப்பற்றியிருக்கிறார்கள். நீங்கள் பிரபலங்களைப் பிடிக்கவும் அவர்களுடன் புகைப்படம் எடுக்கவுமே ஆர்வமாக உள்ளீர்கள். உங்கள் கூட்டணியில் இருந்தபோது, நாங்கள் நல்லவர்களாக தெரிந்தோம். எங்களுடன் அமலாக்கப்பிரிவை பயன்படுத்தாமல் நேரடியாக மோதி பார்க்க முடியுமா? நீங்கள் பலமுறை ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி செய்தும், எங்கள் அரசு அடுத்த மாதம் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. உங்களுக்கு தைரியம் இருந்தால், என்னுடைய அரசை கலைத்து பாருங்கள்.” என்று உத்தவ் தாக்கரே சவால் விடுத்தார்.
