If you are not eligible in a suitable place events that will take place
2017 - 2018 ஆம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் மூச்சுவிடமால் வேகமாக படித்த நிகழ்வு பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. சமூக வலைத்தளங்களில் ஜெயக்குமாரை கேலி செய்யும் விதமாக மீம்ஸ்சுகள் ரெக்கை கட்டி பறக்கின்றன. இதற்கிடையே பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், ஜெயக்குமாரின்
இச்செயலைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கை பின்வருமாறு...
தகுதியான இடத்தில் தகுதியானவர்கள் இல்லாவிட்டால், அந்த இடத்தில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் தகுதி குறைந்தவையாகவே இருக்கும் என்பதற்கு தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்போது நிகழ்ந்த சில நிகழ்வுகள் உதாரணமாகும். அவையின் மாண்பையும், நிதிநிலை அறிக்கையின் புனிதத்தையும் கெடுக்கும் இந்த அநாகரீகமான செயல்கள் கண்டிக்கத்தக்கவை.

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை என்பது மிகவும் புனிதமான ஆவணமாகும். சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக, அந்த ஆவணத்தை சம்பந்தப்பட்டவர்களைத் தவிர வேறு யாரும் பார்க்கக்கூடாது என்பது விதியாகும். அவ்வாறு வேறு எவரேனும் அந்த ஆவணத்தை படித்தாலோ அல்லது பார்த்தாலோ அதற்கு பொறுப்பேற்று சம்பந்தப்பட்ட அரசு பதவி விலக வேண்டும் என்பது மரபு ஆகும்.
ஆனால், தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்கு முன்பாக 2017-18 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை சென்னை கடற்கரையில் உள்ள ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவின் சமாதியில் வைத்து வணங்கியிருக்கிறார். இது ஒட்டுமொத்த பேரவையின் மாண்பையும், நிதிநிலை அறிக்கையின் புனிதத்தையும் குலைக்கும் செயலாகும்.

ஒருவேளை அதிமுக தலைவர்களின் நம்பிக்கைப்படி ஜெயலலிதாவின் ஆன்மா அந்த நிதிநிலை அறிக்கையை படித்திருந்தால் அதற்கு பொறுப்பேற்று பினாமி அரசு உடனே பதவி விலக வேண்டும். பினாமி அரசு அதை செய்யுமா?
அதுமட்டுமின்றி, தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா, சிறைதண்டனை அனுபவித்து வரும் சசிகலா, ஹவாலா மோசடி வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள தினகரன் ஆகியோரின் பெயர்களை நிதியமைச்சர் குறிப்பிட்டது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும். சட்டப்பேரவையின் புனிதத்தையும், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் நிகழ்வின் புனிதத்தையும் இதைவிட எவரும் கெடுக்க முடியாது.
பேரவையின் மாண்புக்கு எதிராக இந்த செயலை பேரவைத் தலைவர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது மன்னிக்க முடியாத செயலாகும். நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தமது இருக்கை சேதப்படுத்தப்பட்டதற்காகவும், தமது சட்டை கிழிக்கப்பட்டதற்காகவும் கண்ணீர் விட்ட பேரவைத் தலைவர், இப்போது சட்டப் பேரவையின் மரியாதையும், நிதிநிலை அறிக்கையின் புனிதமும் ஆட்சியாளர்களால் தாறுமாறாக தகர்க்கப்பட்டிருப்பதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? இச்செயலுக்கு அவர் துணை நிற்கிறாரா? என்பதை விளக்க வேண்டும்.

ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவின் பெயரில் எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படக் கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. அவ்வாறு இருக்கும் போது அம்மா பெயரிலான திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது நீதிமன்றங்களை அவமதிக்கும் செயலாகும். சென்னை உயர்நீதிமன்றத்தையும், தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தையும் அணுகி இந்த அநீதிக்கு முடிவு கட்டுவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொள்ளும்.
இதற்கெல்லாம் மேலாக நிதிநிலை அறிக்கை தாக்கல் நிகழ்வை கேலி செய்யும் செயலையும் நிதி அமைச்சர் ஜெயக்குமார் செய்திருக்கிறார். நீண்டநேரமாக நிதிநிலை அறிக்கை உரை நீடிப்பதை சுட்டிக்காட்டிய உறுப்பினர்கள் விரைவாக படிக்கும்படி கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. உறுப்பினர்கள் அவ்வாறு கோரியிருந்தால் கூட, வாழ்நாள் முழுவதும் மக்களுக்கு சேவை செய்வதாக வாக்குறுதி அளித்து வெற்றி பெற்ற உறுப்பினர்கள் நிதிநிலை அறிக்கையை படிக்க சில நிமிடங்கள் கூடுதலாக ஆனால் அதைப் பொறுத்துக் கொள்ளத் தான் வேண்டும்.
அதற்காக அவசரப்படக்கூடாது என்று தான் கூறியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல், நிதிநிலை அறிக்கை உரையை வேகமாக படிப்பதாக நினைத்துக் கொண்டு மூச்சுவிடாமல் படித்தார். அப்போது அவர் படித்தது யாருக்கும் புரிய வில்லை. திரைப்படங்களில் வேண்டுமானால் நாயகியின் வேண்டுகோளுக்காக நாயகன் மூச்சு விடாமல் பாடுவது ரசிக்கப்படும்; மாறாக இத்தகைய குசும்பு செயல்களை பேரவையில் நிகழ்த்துவது அவையின் மாண்புக்கு களங்கத்தை ஏற்படுத்தும் செயல் என்பதை அரைவேக்காட்டு அமைச்சர்கள் உணர வேண்டும்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிவாரணம் போதுமானதல்ல என்று அனைவரும் கூறியுள்ள நிலையில், கூடுதல் நிவாரணம் வழங்கவோ, உழவர்களின் துயரத்தை துடைக்கவோ எந்த திட்டத்தையும் மாநில அரசு அறிவிக்காதது விவசாயிகள் நலனில் பினாமி பழனிசாமி அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதையே காட்டுகிறது. அதேபோல், மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பைப் பெருக்க எந்த திட்டமும் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படவில்லை.
ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா போன்ற தலைசிறந்த முதலமைச்சர்களையும், நிதியமைச்சர்களையும் சட்டப்பேரவை பார்த்திருக்கிறது. அவர்களின் செயல்களால் புனிதமடைந்த தமிழக சட்டப்பேரவை, நிதியமைச்சரின் இன்றைய செயல்களால் தலைகுனிந்திருக்கிறது. அவையின் மாண்பையும், புனிதத்தையும் காப்பதற்காக நிதியமைச்சர் ஜெயக்குமார் பதவி விலக வேண்டும். இவ்வாறு தனது அறிக்கையில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
