திருவள்ளுவர் கிறிஸ்தவரா என்று புத்தகம் எழுதினால் அந்தப் புத்தகத்தைப் படித்து இன்புற தோன்றும் திமுகவுக்கு, அவர் இந்து என்றால் மட்டும் கசக்கிறதா என தமிழக பாஜகவின் மாநில செயலாளர் கே டி ராகவன் கேள்வி எழுப்பியுள்ளார். 

பாஜகவின் சமூகவலைதளத்தில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்து உத்திராட்ச மாலை போட்டு நெற்றியில் திருநீரு பூசியபடி,  புகைப்படம் ஒன்று  வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு திமுக,  மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம்,  உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை கொந்தளிப்படைய செய்துள்ளது.  திருக்குறள் வடித்த திருவள்ளுவரை பாஜக மதரீதியாக உருமாற்றி சொந்தம் கொண்டாட நினைக்கிறது. திருவள்ளுவரை வாக்கு அரசியலுக்கு பயன்படுத்த திட்டம் போடுகிறது என கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.  இந்நிலையில் தமிழக பாஜகவின் தேசிய செயலாளர் கே. டி. ராகவன் திமுகவிற்கு கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.  அதன்விவரம்பின்வருமாறு:-

கடந்த 1969 ஆம் தேதி அப்போதைய முதலமைச்சராக இருந்த மு. கருணாநிதி புலவர்  மு. தெய்வநாயகம் திருவள்ளுவர் கிறிஸ்தவரா என்று எழுதிய நூலுக்கு வாழ்த்துக் கூறி கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.  அதில் ”காலம், இனம், நாடு என்னும் எல்லைகளைக் கடந்து எல்லா நாட்டினருக்கும் எல்லா காலத்துக்கும் ஏற்ற அறிவுக் கருவூலமாக திகழ்வது திருக்குறள்.  அறிவும், அழகும், துடிப்பும் , துள்ளலும் , நிறைந்த பிள்ளையை ஊரார் அனைவரும் தன் வீட்டுப் பிள்ளையாக எண்ணி மகிழ்வது போல தமிழகத்தில் உள்ள பல்வேறு சமயத்தினரும் திருவள்ளுவர் பெருந்தகையை தம் சமயத்தினராக எண்ணுவது அவர்மேல் அவர்கள் கொண்டுள்ள அளவற்ற அன்பையும் மதிப்பையும் எடுத்துக்காட்டுகிறது.  புலவர் மு. தெய்வநாயகம் தமது திருவள்ளுவர் கிறிஸ்தவரா எனும்  நூலில் பல நூல்களில் இருந்து எடுத்து தந்துள்ள மேற்கோள்களும் கருத்துக்களும் வரலாற்று குறிப்புகளும் படித்து இன்புற தோன்றுகின்றன. 

திருவள்ளுவர் எல்லா மதத்தினருக்கும்  பொதுவானவர் என்னும் கருத்தை நான் வரவேற்கிறேன்.  இருப்பினும் இத்தகைய ஆராய்ச்சி நூல்கள் படிப்போரின் சிந்தையை  தூண்ட  வல்லவையாகும், ஆசிரியருக்கு என் வாழ்த்துக்கள்...  இப்படிக்கு மு கருணாநிதி என்று எழுதியுள்ளார்.  இந்தக் கடிதத்தை மேற்கோள் காட்டியுள்ள பாஜக மாநில செயலாளர் கே டி ராகவன் திருவள்ளுவர் கிறிஸ்தவரா என்று புத்தகம்  எழுதினால் அந்த புத்தகத்தை படித்து இன்புற தோன்றும் திமுகவுக்கு அவர்  ஹிந்து என்றால் மட்டும் கசக்குமா.? என கேள்வி எழுப்பி உள்ளார்.