If the growth comes by affecting people livelihood do not need such a plan - Muthasaran
விழுப்புரம்
மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அதனால் வளர்ச்சி வரும் என்றால் அப்படிப்பட்ட பசுமை சாலை திட்டமே தேவையில்லை என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் விழுப்புரத்தில் நேற்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், "மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகளை யாரும் விமர்சிக்கக் கூடாது என்பதற்காக தமிழக அரசு மிக கடுமையான அடக்குமுறையையும், சர்வாதிகார போக்கையும் கையாண்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் ஒரு கோடி கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களை மத்திய, மாநில அரசுகள் முற்றிலும் புறக்கணித்துவிட்டன.
வேலையின்மை மற்றும் அவர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகளை வழங்காததால் விவசாயிகள் நாதியற்று நிற்கின்றனர்.
விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலையின்மை, வீடு இல்லை மற்றும் ஓய்வூதியம், கல்வி இந்த பிரச்சினைகளை முன்வைத்து விழுப்புரத்தில் செப்டம்பர் மாதம் 1, 2, 3–ஆம் தேதிகளில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் 12–வது மாநில மாநாடு நடக்க இருக்கிறது.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் இரட்டை வேடம் போடுகிறது. இதேநிலை தொடர்ந்தால் இன்னும் தீவிரமாக போராட்டம் நடத்தப்படும்
சேலம் – சென்னை இடையே பசுமை வழிச்சாலையை ரூ.10 ஆயிரம் கோடியில் அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். வளர்ச்சி ஒருபக்கம் இருந்தாலும் இந்தத் திட்டத்தினால் 2200–க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் நிலங்களை இழக்க வேண்டிய அபாயத்தில் உள்ளனர்.
இப்படி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அதனால் வளர்ச்சி வரும் என்றால் அப்படிப்பட்ட திட்டமே தேவையில்லை. எனவே, பசுமை சாலை திட்டத்தை அரசு பரிசீலனை செய்ய வேண்டும்" என்று அவர் தீவிரமாக கூறினார்.
