சமூக நீதி என்று பேசினால்.. திமுக உள்பட எல்லா கட்சிகளும் திரெளபதியை ஆதரிக்கணும்.. அன்புமணி ராமதாஸ் அட்வைஸ்!
திமுக உள்பட அனைத்து கட்சிகளும் திரெளபதி முர்முவை ஆதரிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 அன்று நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரெளபதி முர்மு போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளராக யஷ்வந்த சின்ஹா களம் இறங்கியுள்ளார். இருவரும் தங்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக ஒவ்வொரு மாநிலத்துக்கும் சென்று வருகிறார்கள். யஷ்வந்த சின்ஹா ஏற்கனவே சென்னைக்கு வந்து திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினை சந்தித்து ஆதரவு திரட்டிவிட்டு சென்றார். இந்நிலையில் திரெளபதி முர்மு இன்று புதுச்சேரி மற்றும் சென்னைக்கு வந்து ஆதரவு திரட்டினார்.
இதையும் படிங்க: பாஜக முன்னாடியே சொல்லி இருந்தால்.. முர்முவுக்கு ஆதரவு அளிப்பது பற்றி பரிசீலித்திருப்போம்.. மம்தா பல்டி.
சென்னையில் அதிமுக தலைவர்களான ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை தனித்தனியாகச் சந்தித்து ஆதரவு திரட்டினார். இதேபோல பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்முவைச் சந்தித்து தங்களுடைய ஆதரவை தெரிவித்தார். பின்னர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு பாமக ஆதரவு அளிக்கிறது. இதை எங்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தற்போது சென்னைக்கு வருகை தந்துள்ள திரெளபதி முர்முவுக்கு நாங்கள் நேரடியாக வந்து எங்களுடைய ஆதரவை வழங்கி இருக்கிறோம்.
இதையும் படிங்க: கழக சட்ட விதிகளின்படி இன்றுவரை அதிமுக ஒங்கிணைப்பாளர் நான் தான்.. மாஸ் காட்டிய ஓபிஎஸ்.
தேர்தலில் திரெளபதி முர்மு நிச்சயமாக வெற்றி பெறுவார். பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண்மணி திரெளபதி முர்மு. எளிய குடும்பத்தில் பிறந்து, உழைப்பால் உயர்ந்திருக்கிற அவர், நிச்சயமாக வெற்றி பெற வேண்டும். எங்கள் கட்சியின் அடிப்படை கொள்கையே சமூக நீதிதான். அதன் அடிப்படையிலும் அவருக்கு எங்கள் கட்சி முழுமையாக ஆதரவு தெரிவிக்கிறது. நாங்கள் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள எல்லா கட்சிகளும் அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். அவரை கட்சிக்கு அப்பாற்பட்ட பெண்மணியாகப் பார்க்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக அவரைப் பார்க்கக் கூடாது. அந்த வகையில், திமுக உள்பட அனைத்து கட்சிகளும் திரெளபதி முர்முவை ஆதரிக்க வேண்டும். சமூக நீதி என்று பேசினால், நிச்சயமாக திரெளபதி முர்முவேவை ஆதரிப்பார்கள்.” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாஜகவில் சேர்கிறார் ஓபிஎஸ்? பாஜக பிரமுகர் சொன்ன அதிர்ச்சி தகவல் !