பசுப்பாதுகாப்பாளர்கள் என்ற பெயரில் வன்முறையாளர்கள் சட்டத்தைக் கையில் எடுத்துவிட்டார்கள் என சீதாராம் யெச்சூரி மீதான தாக்குதலுக்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்து சேனா அமைப்பை சேர்ந்த இரண்டு பேர் அவரை தாக்க முயற்சி செய்தனர்.

இதையறிந்த அங்கு இருந்தவர்கள் தாக்க முயன்றவர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

சீதாராம் யெச்சூரியை தாக்க முயன்றதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து இந்தியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகவும், நன்கு திட்டமிட்டுத்தான் யெச்சூரியைத் தாக்கி இருக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

மராட்டியத்திலும் கர்நாடகத்திலும் இந்துத்துவ அமைப்புகளுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்து வந்த முற்போக்குச் சிந்தனையாளர்கள் தபோல்கர், பன்சாரே, கல்புர்கி ஆகிய மூவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதாகவும், இதுவரை கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை எனவும் குறிபிட்டுள்ளார்.

அதனால் தான் வன்முறையாளர்கள் இத்தகைய துணிச்சல்களில் இறங்குகிறார்கள் எனவும், பசுப்பாதுகாப்பாளர்கள் என்ற பெயரில் வட இந்தியா முழுமையும் வன்முறையாளர்கள் சட்டத்தைக் கையில் எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

சீதாராம் யெச்சூரியை தாக்கியவர்களின் பின்னணி குறித்து ஆராய்ந்து இயக்கியவர்களையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.