Asianet News TamilAsianet News Tamil

பெட்ரோல், டீசல் விலை ரூ 30 குறைய வாய்ப்பு..? முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்..! ஓபிஎஸ் கோரிக்கை

பெட்ரோல், டீசல் பொருட்களை,  ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வந்தால் ரூ.30 வரை விலை குறைய வாய்ப்பு இருப்பதாகவும், எனவே தமிழக முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.  
 

If petroleum products are brought under GST the price may go down by Rs 30 ops demands immediate action by Tamil Nadu Chief Minister
Author
Tamilnadu, First Published May 11, 2022, 10:40 AM IST

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் பாதிப்பு

பெட்ரோல் டீசல் விலையை குறைப்பது தொடர்பாக தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை வழங்கியுள்ளார். அதில், "பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கொரோனா காலத்திலும், அண்மையிலும் கடுமையான வரி உயர்வுகள் காரணமாக முன்பு இல்லாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளன. அனைத்துத் தரப்பு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு நான்கு ரூபாயும் குறைக்கப்படும்” என தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவுடன் அனைத்துத் தரப்பு மக்களின் நலனை தி.மு.க. காற்றில் பறக்கவிட்டுவிட்டது. தி.மு.க. அரசு 7-5-2021 அன்று ஆட்சிப் பொறுப்பையேற்றபோது, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 93 ரூபாய் 17 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றைக்கு, மாநில அரசால் லிட்டருக்கு மூன்று ரூபாயும், மத்திய அரசால் ஐந்து ரூபாயும் குறைக்கப்பட்ட நிலையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 110 ரூபாய் 85 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டில் 17 ரூபாய் 68 காசாக பெட்ரோல் விலை உயர்ந்து இருக்கிறது. தமிழ்நாடு அரசால் பெட்ரோல் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்பட்டாலும், கடந்த ஓராண்டில் உயர்ந்த 17 ரூபாய் 68 காசு மூலம் முன்பைவிட கூடுதல் வருவாய் தமிழ்நாடு அரசுக்கு கிடைத்து வருகிறது.

If petroleum products are brought under GST the price may go down by Rs 30 ops demands immediate action by Tamil Nadu Chief Minister

ஜி.எஸ்.டிக்குள் பெட்ரோலிய பொருட்கள்

டீசலைப் பொறுத்த வரையில், தி.மு.க. ஆட்சி வந்த பிறகு ஒரு காசு கூட குறைக்கப்படவில்லை. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றபோது டீசல் விலை லிட்டருக்கு 86 ரூபாய் 65 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றைக்கு, மத்திய அரசால் லிட்டருக்கு 10 ரூபாய் குறைக்கப்பட்ட நிலையில், டீசல் விலை லிட்டருக்கு 100 ரூபாய் 94 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, இந்த ஓராண்டில் மட்டும் டீசல் விலை 14 ரூபாய் 29 காசு உயர்ந்து இருக்கிறது. இந்த உயர்த்தப்பட்ட விலை மூலம் தமிழ்நாடு அரசுக்கு முன்பைவிட கூடுதல் வருவாய் கிடைத்து வருகிறது. இது தவிர, பெட்ரோலியப் பொருட்களின் மூலமான வருவாய் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தேர்தல் வாக்குறுதிப்படி, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முன் வராத தி.மு.க. அரசு, பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு மத்திய அரசு தான் காரணம் என்று சுட்டிக்காட்டி வருகிறது. இந்தச் சூழ்நிலையில், துக்ளக் இதழின் 52-வது ஆண்டு விழாவில் கலந்து கொள்ள வந்த மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் அவர்கள் அந்த விழாவிற்கு வருகை புரிந்த ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்கையில், "தமிழ்நாடு நிதி அமைச்சர் அவர்கள் ஒப்புக் கொண்டால், பெட்ரோல் மற்றும் டீசலை பொருட்கள் மற்றும் சேவைகள் வரி வரம்பிற்குள் கொண்டு வரும் வகையில், இந்தப் பொருள ஜி.எஸ்.டி. கவுன்சிலில் சேர்க்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, பெட்ரோல் மற்றும் டீசல் விலை  குறைக்கப்பட வேண்டுமென்றால், அவற்றை பொருட்கள் மற்றும் சேவைகள் வரியின் வரம்பிற்குக் கீழ் கொண்டு வர வேண்டும் அல்லது அதற்கான ஆயத் தீர்வை குறைக்கப்பட வேண்டும் என்று 24-01-2018 அன்று பேசி இருக்கிறார்.

If petroleum products are brought under GST the price may go down by Rs 30 ops demands immediate action by Tamil Nadu Chief Minister

ரூ. 30 வரை விலை குறைய வாய்ப்பு

 இந்தச் செய்தி அனைத்துப் பத்திரிகைகளிலும் வெளி வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, 04-04-2018 அன்று தனது டிவிட்டர் பக்கத்தில், பொதுமக்களின் சுமையை குறைக்கும் வகையில், பெட்ரோலியப் பொருட்களை, சரக்குகள் மற்றும் சேவைகள் வரி வரம்பின்கீழ் கொண்டு வர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தி இருக்கிறார். பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றை ஜி.எஸ்.டி. வரி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டியதன் அவசியம் குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 28-06-2018 அன்று தி.மு.க. சார்பில் வெட்டுத் தீர்மானம் அளிக்கப்பட்டு இருக்கிறது. பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றை பொருட்கள் மற்றும் சேவைகள் வரி வரம்பிற்குள் கொண்டு வருவதற்கு தி.மு.க. ஆதரவளிக்கும் என்றும், மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களுடைய கருத்து தி.மு.க.வின் கருத்து அல்ல என்றும் சில மாதங்களுக்கு முன் தி.மு.க.வின் பொருளாளரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான திரு. டி.ஆர். பாலு அவர்கள் தெரிவித்து இருந்தார்.இதிலிருந்து பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வருவதில் தி.மு.க.வும், மத்திய அரசும் ஒரே நிலைப்பாட்டில் இருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது. இதன்மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை குறைய வாய்ப்பு, உள்ளதாகவும் கூறப்படுகிறது.எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மத்திய நிதி அமைச்சருடனும், மற்ற மாநில முதலமைச்சர்களுடனும் கலந்து பேசி, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வந்து அனைத்துத் தரப்பு மக்களின் நலனைக் காக்க வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், பொதுமக்களின் சார்பிலும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக ஓ.பன்னீர் செல்வம் இந்த அறிக்கையில் கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios